கோயம்புத்தூர்: கொல்லப்படுகிறதா நொய்யல் ஆறு? கொத்து கொத்தாக சாகும் மீன்கள் - விரிவான தகவல்

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவையில் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மீன்கள் இறந்து மிதக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. இது சூழலியல் அழிவிற்கான அறிகுறி என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள நொய்யல் நதியின் தடுப்பணையில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், தன்னார்வலர் குழுக்களும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
'கோவையின் முக்கிய நீராதாரமான நொய்யல் நதி இன்றைக்கு பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், நதி நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலையில் உள்ளது. நதியின் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் இறந்து மிதக்கின்றன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
சாயக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு மற்றும் ரசாயணக்கழிவுகளை நீரில் கலப்பது ஓர் முக்கிய காரணம். மற்றொரு காரணம், பாரம்பரிய மீன்களை தவிர்த்துவிட்டு, வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது. அவை, அவ்வப்போது ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறந்துவிடுகின்றன என்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன்.

மேலும் அவர் ,நஞ்சுண்டாபுரம் தடுப்பணையில் மீன்கள் இறந்து மிதந்த காட்சி வேதனையளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து குளக்கரையில் கிடக்கும் திடக்கழிவுகளை அகற்றி வருகிறோம். ஆனால், நீர்நிலைகளில் சேரும் கழிவும் குப்பைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, நீரின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த நதியின் கிளை ஓடைகளை ஒட்டி அமைந்துள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்' என்கிறார்
இந்த அமைப்பினர் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாநகரில் உள்ள குளங்களை வாரந்தோறும் சுத்தம் செய்து வருகின்றனர்.
மீன்கள் இறந்து மிதந்த தடுப்பணையிலிருந்து நீர் மாதிரிகளை சேகரித்து சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, ”கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நொய்யல் நதி மற்றும் அதன் ஓடையை ஒட்டி அமைந்திருந்த சாயப்பட்டறைகளும், ரசாயனத்தொழிற்சாலைகளும் அகற்றப்பட்டுவிட்டன,” என்றனர்

மேலும் எனவே, மீன்கள் தொழிற்சாலை கழிவுகளால் இறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பாதாள சாக்கடை திட்டம் நிறுவப்படாத நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் மொத்தமும் குளங்களில் தான் கலக்கப்படுகிறது. இதனால், மீன்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது, நீரின் மேற்பரப்பில் நுரைப்படலங்கள் உருவாகின்றன. மேலும், மீன்கள் உயிர்வாழ தேவையான ஆக்சிஜன் அளவை நீரில் கலக்கப்படும் கழிவுகளும், குப்பைகளும் பாதிக்கின்றன. இதனால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் இறந்துவிடுகின்றன. தற்போது, நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்த பின்னர்தான் சரியான காரணங்கள் தெரியவரும்' எனத் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் மட்டுமே ஒன்பது குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொதுப்பணித்துறையிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெற்று கோவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதி பங்களிப்போடு சில குளங்களின் கரைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நொய்யல் நதியின் கிளை ஓடைகளும், தடுப்பணைகளும் சுத்தமாக பராமரிக்கப்படாததால் குளத்தில் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், செல்வாம்பதி குளத்தில் இதேபோல் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.
நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாடுகள் குறித்து பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் பி.கே.செல்வராஜ், ”இதற்கு முன்னர் நீலாம்பூர் பகுதியில் உள்ள ஆச்சான்குளத்திலும், மேலும் சில குளங்களிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இவை சூழலியல் அழிவிற்கான முதல் சாட்சி. நீர்நிலைகளை எந்த அளவிற்கு நாம் மாசுபடுத்தியிருக்கிறோம் என்பதை நாம் இப்போதாவது உணரவேண்டும். மீன்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நாட்டுவகை மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதோடு, குளங்களின் கொள்ளளவுக்கு ஏற்ற எண்ணிக்கையில் மீன்களை வளர்க்க வேண்டும். இதில், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் ,”ஷாம்பு, சோப்பு என நாம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து ரசாயணங்களின் கழிவுநீரும், பிளாஸ்டிக் குப்பைகளும் குளங்களில் தான் கலக்கப்படுகிறது. இதனால், குளத்தின் அடியில் திடமான படலங்கள் உருவாகி நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிக்கிறது. குளங்களின் அருகே உள்ள பகுதிகளில் கூட பல நூறு அடிகளுக்கும் கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. எனவே, நீர்நிலைகளின் தரத்தை அரசு நிர்வாகம் தொடர்ந்து கண்கானிக்க பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி நீர் மாசடைவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும்” என்றார்.
பிற செய்திகள்:
- சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா?
- U 19 Ind Vs Ban: ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகுமா இந்தியா?
- காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாறுமா? - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்
- #BBCISWOTY: உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களியுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













