ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை அபராதம்
நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005 வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03ஆம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04ஆம் நிதியாண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05ஆம் நிதியாண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் (3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 436) நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவருடைய மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஏற்கவில்லை. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. மேலும் அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவையும் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது. வருமான வரித்துறையில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு குறைவான வரி தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு தேவையில்லை என்றும், ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை திரும்பப்பெறுவதாக வருமான வரித்துறை, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த செலவுகள் விவரம் குறித்து தொடக்கத்தில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் அவர் காட்டவில்லை என்பதாலும், இதற்கான வருமானத்தை அவர் மறைத்திருக்கலாம் என்பதாலும் ரஜினிகாந்துக்கு முதலில் விதித்த அபராத தொகையை வருமான வரித்துறை வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது என தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகை குறைந்தபட்சம் ரூ.66.22 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1.98 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - செயற்கை கருத்தரிப்புக்கு வயது வரம்பு
செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்ட வரைவு ஒன்றை விரைவில் மத்திய அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Wales News Service
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி குழந்தையின்மை சிகிச்சை மூலம் சோதனைக் குழாய் கருத்தரித்தல் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த சில மாதங்களில் இந்த வரைவு தயாராகியுள்ளது.
சோதனைக் குழாய் கருத்தரித்தல் (In Vitro Fertilization), செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination) போன்ற முறைகளில் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 என்றும், தந்தையாக விரும்பும் ஆண்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 55 என்றும் நிர்ணயிக்கப்படவுள்ளது என்கிறது அந்த செய்தி.

தினமணி - வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் அனுப்பிய 8.4 லட்சம் கோடி ரூபாய்
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் மூலமாக 11,830 கோடி டாலர் (சுமாா் ரூ.8.4 லட்சம் கோடி) இந்தியாவுக்கு வந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.
மக்களவையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நேபாளம், மத்திய கிழக்கு நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்தியா்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தியத் தூதரகங்களிடமிருந்து கிடைத்த தகவல்படி, வெளிநாடுகளில் 1.36 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் மூலமாக, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 7,640 கோடி டாலரும் (சுமார் ரூ.5.44 லட்சம் கோடி), 2019-ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 4190 கோடி டாலரும் (சுமார் ரூ.2.98 லட்சம் கோடி) இந்தியாவுக்கு வந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













