கொரோனா தாக்கம் குறித்து சீனாவிலிருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டி

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து கல்வி, வர்த்தகம், மற்றும் வேலைக்காக சென்றவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்திய அரசு சீனாவில் உள்ள இந்தியர்களை மருத்துவ பரிசோதனை செய்து பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 31 முதல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புலியூர், வெள்ளையபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள், சீனாவில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்களில் புலியூரை சேர்ந்த ராஜாராம், முருகானந்தம், தியாகு, அழகுதிருநாவுக்கரசு என 15க்கும் மேற்பட்டடோர் இரண்டு நாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

சீனாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் குறித்து பேசிய ராஜாராம் "நாங்கள் இருந்த இடம் ஷாங்காய் அருகே. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிக்கும் எங்கள் இடத்துக்கும் 1,000 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்."

"கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சீனாவில் உணவு சரிவர கிடைக்கவில்லை. அதே போல் ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்துக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி மற்ற மாகாணங்களுக்கு செல்லும் மக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார் ராஜாராம்.

சீனாவில் இருந்து தமிழகம் வந்த தியாகு பேசுகையில், "சீன வருடப் பிறப்பு 8வது நாள் முதல் பத்து நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நோய் தாக்குதலால் வருடப் பிறப்பு கொண்டாடாப்படவில்லை. தெருக்களில் மனிதர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது."

"கடந்த 2 நாள்களில் நாங்கள் 10 பேர் சொந்த ஊருக்கு வந்துள்ளோம். எங்களுக்கு சென்னையில் முழு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பாதிப்பு இல்லையென மருத்துவர்கள் கூறியதோடு இன்னும் எட்டு நாட்கள் கழித்து தான் முழுமையான ரிசல்ட் தெரியவரும். எனவே, வீட்டிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பாக இருக்கவும். அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது."

இதுகுறித்து மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் குமரகுருபரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இதுவரை சீனாவில் இருந்த 20 பேர் வந்துள்ளனர். வரும் இரண்டு மூன்று நாட்களில் 36 பேர் வர உள்ளனர். வருபவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக வருவார்கள்."

"சீனாவில் இருந்து வருபவர்களின் முகவரி ,தொலைபேசி எண் அவர்களது உறவினர்களின் தொலைபேசி எண்கள் விமான நிலையங்களில் வைத்து பெறப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று அங்குள்ள ஆரம்ப சுகாதார மருத்துவர்களை கொண்டு சீனவில் இருந்த வருபவர்களின் உடல் நிலை பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், தொடர் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சிறப்பு கவனம் எடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபடுவார்கள். சாதாரண காய்ச்சல், தலைவலி உள்ளவர்களை வீட்டில் வைத்து தினமும் மருத்துவர்கள் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்பார்கள்; காரணம் சீனாவில் இருந்து வருபவர்களை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளித்தால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கபடுவார்கள்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில் 'மூச்சுவாங்குதல்,கட்டுப்படாத காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களிடம் 'Throat Swab' மாதிரி எடுத்து (தொண்டையை பஞ்சு மூலம் துடைத்து செய்யப்படும் ஆய்வு) அதனை சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சோதனை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பது முடிவு செய்யப்படும்.

"சீனாவில் இருந்து வந்துள்ளவர்கள் குறிப்பிட்ட நாள்கள் வரை திருமண விழா, சந்தை போன்ற பொது இடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் உள்ள மக்கள் கிருமி நாசினியால் வீட்டின் தரை, கதவு, கைப்பிடி, கை வைக்கும் இடங்களில் தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை மக்கள் யாரிடமும் கை குலுக்க வேண்டாம்" என்று குமரகுருபரன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: