You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று 2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 2020 - 21ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6ல் இருந்து 6.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடப்பு 2019-20 நிதியாண்டில் தொழில் துறையின் வளர்ச்சி 2.5% ஆக இருந்துள்ளது.
- ஒரு தரப்பினர் விமர்சிப்பதைப் போல இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாகவோ குறைத்தோ காட்டப்படவில்லை.
- பொருளாதாரத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு உலகிற்கே கடினமான ஆண்டு என்பதால் அது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது.
- 2025ஆம் ஆண்டுக்குள் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கலாம். 2030க்குள் எட்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
- இந்திய பொருளாதாரத்தை 2024-2025ஆம் நிதியாண்டில் ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்துவது சந்தையை வலுப்படுத்தலை சார்ந்துள்ளது.
- வங்கித்துறையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பொருளாதார சீர்திருத்தங்கள் துரிதமாக எடுக்கப்படும் என்று பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 2019ல் 3.2 சதவீதமாக இருந்த பணவீக்கம், டிசம்பர் 2019ல் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
- இந்தியப் பொருளாதாரத்தின் மொத மதிப்பீட்டில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் பங்கு கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணம் விவசாயம் அல்லாத துறைகளின் வளர்ச்சி என்கிறது இந்த ஆய்வறிக்கை.
- 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- புதிய ஆயுதங்கள் மற்றும் பெரும் வெடிபொருட்களுக்கு உரிமம் பெறுவதைவிட, டெல்லியில் ஒரு ஹோட்டல் தொடங்குவதற்கு உரிமம் பெற அதிக ஆவணங்கள் சமர்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
- சரக்கு ஏற்றுமதியைவிட சேவைகளின் ஏற்றுமதி கடந்த தசாப்தத்தில் அதிகமாக இருந்துள்ளது. 2018இல் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதிகளின் பங்கு உலக அளவில் 3.5%ஆக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் இது 1.7% ஆக இருந்தது.
- இந்திய அரசு தீர்மானித்தபடி, தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 1.02 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கான நிதியை ஒதுக்குவது சவாலாக இருக்கும்.
- கடந்த 13 ஆண்டுகளில் அசைவ உணவைவிட சைவ உணவை உண்பதற்காக செலவிடும் திறன் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு நாளுக்கு இரு வேளை சைவ உணவு உண்ணும், ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,887 ரூபாய் மீதமாகியுள்ளது. இதுவே இருவேளை அசைவம் உண்ணும் குடும்பத்துக்கு 11,787 ரூபாய் மீதமாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: