IND vs NZ டி20: இந்த முறையும் சூப்பர் ஓவரில் வென்றது இந்தியா; 4-0 என முன்னிலை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 தொடரின் நான்காவது போட்டியும் மூன்றாவது போட்டியைப் போலவே சூப்பர் ஓவரில் முடிந்தது. இந்த சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.

இங்கிலாந்து உடனான உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே, 3வது டி20 போட்டி, இன்றைய டி20 போட்டி என சூப்பர் ஓவர் நியூசிலாந்துக்கு சொதப்பல் ஓவராகவே முடிகிறது.

இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே தலா 165 ரன்கள் எடுத்ததால் நடந்த சூப்பர் ஓவரில், நியூசிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் எடுத்தது. இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி இன்றைய வெற்றியுடன் 4-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

39 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் மற்றும் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த மணீஷ் பாண்டே தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

இரண்டாவது இன்னிங்க்சின் இறுதி ஓவரை வீசிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய காலின் மன்ரோ நியூசிலாந்து அணிக்காக 47 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சய்ஃபெர்ட் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ஆனால், இவர்களின் சிறப்பான ஆட்டம் நியூசிலாந்து வெற்றிக்கனியை பறிக்க உதவவில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஈஷ் சோதி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர். இவரது சிறு வயதிலேயே இவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

போட்டி நடைபெறும் 'ஸ்கை ஸ்டேடியம்' மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160. இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 133 மட்டுமே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: