You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறார் ஆபாசப்படம் பார்த்ததாக சென்னையில் ஒருவர் கைது
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: சிறார் ஆபாசப்படம் - சென்னையில் ஒருவர் கைது
சென்னையில் 2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞரை ஐபி முகவரியை வைத்து போலீஸார் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதுதொடர்பான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சிறார் ஆபாச வலைதளங்களை பார்ப்பவர்கள் குறித்து ஐபி அட்ரஸ்களை வைத்து போலீஸார் சோதனையிட்டு வந்தபோது அம்பத்தூரை சேர்ந்த ஹரீஷ் (24) என்கிற இளைஞர் கடந்த 2018- ஆகஸ்டு மாதம் முதல் தற்போது கைது செய்யப்படும்வரை சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் அனுப்பிய ஐபி அட்ரஸ் அடிப்படையில் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஹரீஷை புதன்கிழமை மதியம் கைது செய்தனர். ஹரீஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அவர் மீது ஐடி ஆக்ட் 67(பி), 14(1) போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி: "கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மதுரை அரசு மருத்துவமனையில் பிரத்யேக வார்டு"
மதுரையில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
"மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 8 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் 130க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
சீனாவில் இருந்து வருவோரையும் முழுமையாக பரிசோதித்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா: "போக்குவரத்து நெரிசல்: பெங்களூரு முதலிடம்"
உலகிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"டோம்டோம் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலை வெளிட்டு வருகிறது. அந்தவகையில், 2019ஆம் ஆண்டில் இயல்பான நேரத்தை விட 71% அதிக நேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டிய பெங்களூரு நகரம் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
அதே பட்டியலில், இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, புனே, டெல்லி ஆகியவை முறையே 4, 5, 6ஆவது இடங்களை பெற்றுள்ளன.
ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகமான காணப்படும் சென்னை குறித்து இந்த ஆய்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: