You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் கருப்பண்ணன்: திமுக சேர்மன்களுக்கு குறைவான நிதிதான் கொடுப்போம் என்று கூறினாரா?
திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி தொகுதிகளுக்கு குறைவான நிதிதான் ஒதுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டி அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி ஆளுநருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கருப்பண்ணன், ''திமுக சேர்மன்களிடம் பணம் குறைவாகத்தான் கொடுப்போம்'' என பேசியுள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி துரைமுருகன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் மனு அளித்துள்ளார்.
திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் அவர்களின் தொகுதிக்கு குறைவான நிதிதான் அளிக்கப்படும் என அமைச்சராக பொறுப்பில் உள்ள கருப்பண்ணன் பேசியுள்ளது மோசமான செயல் என்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறை என்றும் துரைமுருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
''அமைச்சராக பொறுப்பேற்கும் போது எந்தவொரு விருப்பு, வெறுப்பின்றி, பாரபட்சமில்லாமல் அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்தவர் கருப்பண்ணன். திமுக ஊராட்சி மன்ற தலைவர்களை தேர்வுசெய்த மக்களிடம், அவர்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதால், அவர்களின் தொகுதிக்கு குறைவான நிதிதான் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது,'' என புகாரில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கருப்பண்ணன் போன்றவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்தால், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவறான சித்தரிப்பு
துரைமுருகன் அளித்த புகார் குறித்து அமைச்சர் கருப்பண்ணன், தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''ஆளும் கட்சியாக அதிமுக உள்ளது. மக்கள் அதிமுக உறுப்பினர்களைதேர்வு செய்திருந்தால், உள்ளாட்சி மன்றங்களில் வேலைகள் எளிதில் நடக்கும் என தெரிவித்தேன். என் கருத்தைத் தவறாக சித்தரித்துவிட்டார்கள். நிதி குறைவாக ஒதுக்குவோம் என சொல்லவில்லை. இந்த புகார் தேவையற்றது,'' என்கிறார் கருப்பண்ணன்.
பிற செய்திகள்:
- 71வது குடியரசு தின விழா - அய்யனார் சிலைக்கு போடப்பட்ட பூணூல் மாலையாக மாற்றப்பட்டதா?
- காணாமல் போனவர்களை இறந்தவர்களாக ஒப்புக்கொண்டேனா? கோட்டாபய ராஜபக்ஷ விளக்கம்
- "உயிர்களை பறிக்கும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது" - எச்சரிக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்
- கொரோனா வைரஸ்: சீனாவால் ஆறு நாட்களில் மருத்துவமனை கட்ட முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: