TNPSC Group IV: விசாரணை வலையில் தேர்வாணைய பணியாளர் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு நடந்ததாக வெளியான புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் முதல்முறையாகத் தேர்வாணைய பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்வாணையத்தில் பணிபுரிந்த ரெகார்ட் கிளெர்க் ஒம்காந்தன் என்பவர் இடைத்தரகரிடம் ரூபாய் இரண்டு லட்சத்தை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது என சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகின்றது.

ராமேஸ்வரத்திலிருந்து தேர்வுதாள்களை சென்னைக்கு கொண்டுவர நியமிக்கப்பட்டிருந்த தட்டச்சர் மாணிக்கவேலுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டவர்தான் ரெகார்ட் கிளெர்க் ஒம்காந்தன். தேர்வுதாள்களை எடுத்துக்கொண்டு, மாணிக்கவேல் மற்றும் பாதுகாப்புக்காக வந்த காவலர்கள் ஆகியோருடன் பயணித்த ஒம்காந்தன், அனைவரையும் இரவு உணவுக்காக ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றுவிட்டு, அவர் மட்டும் வெளியே வந்து விடைத்தாள்களை இடமாற்றும் வேலையை செய்துள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒம்காந்தனுக்கு முன்பணம் கொடுத்து, விடைத்தாள்களில் மாற்றம் செய்த இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார் எனக் கூறும் அதிகாரிகள், தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். மேலும் ஒம்காந்தனின் வீட்டில் சோதனை செய்து, இரண்டு அலைபேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஏழுபேர் கைதாகியுள்ள நிலையில்,பணம் கொடுத்துத் தேர்வில் வெற்றிபெறலாம் எனப் பேசி தேர்வர்களிடம் பணம் பெற்று, இடைத்தரகர் ஜெயக்குமாரோடு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பால்சுந்தர்ராஜ் என்பவரும் தற்போது கைதாகியுள்ளார்.

குரூப் 4 முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக தேர்வில், இடைத்தரகர்கள் உதவியோடு முறைகேடு செய்து அரசுப்பணியைப் பெற முயன்ற 99 நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வு எழுதத் தடையைத் தேர்வாணையம் விதித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: