டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு: தமிழகம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து விசாரணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு செய்த வழக்கில் மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 2019 முதல் வாரத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய சுமார் 9,398 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், இடைத்தரகர்கள் உதவியோடு முறைகேடு செய்து அரசுப்பணியை பெற முயன்ற 99 நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வு எழுதத் தடையை தேர்வாணையம் விதித்துள்ளது.

இந்நிலையில், முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இடைத்தரகர் ஒருவரும், தேர்வாளர் ஒருவர் மற்றும் அரசு அலுவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

அதேவழக்கில், தற்போது, சென்னை ஆவடியைச் சேர்ந்த இடைத்தரகர் வெங்கட்ராமன், தேர்வர்கள் திருவேல்முருகன், ராஜசேகர் மற்றும் காலேஷா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது என சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், பிறகு ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தது. தேர்வில் வெற்றி பெற்ற முதல் 99 நபர்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்றும் அவர்கள் முறைகேடு செய்து தேர்வாகியுள்ளனர் என செய்திகள் வெளியாகின.

இந்த புகாரின் அடிப்படையில் தேர்வாணையம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது விசாரணை செய்தது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தனர் என தெரியவந்தது. தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்தனர், இடைத்தரகர்கள் மூலம் சரியான விடைகள் விடைத்தாளில் இடம்பெற்றன என்றும் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

தொடர் விசாரணையில் முக்கிய பங்காற்றியவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பற்றி குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறையில் தமிழ்நாடு முழுவதும் விசாரணை செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என சிபிசிஐடி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: