You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துக்ளக் உரிமை குறித்து குருமூர்த்தி: "யாரிடமிருந்தும் எதையும் பறிக்க வேண்டிய அவசியமில்லை"
துக்ளக்கின் நிறுவனரான சோ, தன் மறைவுக்குப் பிறகு குருமூர்த்தியே அதன் ஆசிரியராகத் தொடர வேண்டுமென வலியுறுத்தி வந்ததாக அதன் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி விளக்கமளித்திருக்கிறார். துக்ளக்கின் உரிமை குறித்து வாட்ஸப்பில் பரவும் தகவல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
துக்ளக் பொன்விழாவின்போது ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில், கடந்த சில நாட்களாக துக்ளக் இதழ் மீதான உரிமை குறித்து வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் சில தகவல்கள் பரவிவந்தன.
மேலும் இன்று காலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் ஒன்றில், சோ குடும்பத்திடமிருந்து துக்ளக் பத்திரிகையை குருமூர்த்தி பறித்துக்கொண்டதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து துக்ளக்கின் தற்போதைய ஆசிரியரான குருமூர்த்தி நீண்ட விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கிறார்.
துக்ளக் பத்திரிகையைத் துவங்கும்போது ஆனந்த விகடன் இதழே அதனை நடத்திவந்தது. இந்த நிலையில், "ஆனந்த விகடனிடம் பேசி, துக்ளக் இதழை விலைக்கு வாங்கிவிட வேண்டுமென 1988ல் (எக்ஸ்பிரஸ் இதழின் உரிமையாளர்) ராம்நாத் கோயங்கா என்னிடம் கூறினார். இது தொடர்பாக (விகடனின் உரிமையாளர் - ஆசிரியர்) பாலசுப்ரமணியத்திடம் பேசினேன். துக்ளக் வாங்கப்பட்டு அந்த நிறுவனத்தில் என் மனைவியும் சோவும் பங்குதாரர்களானார்கள். நான் ஆடிட்டர் என்பதால், அதில் பங்குதாரராகவில்லை.
துக்ளக் இதழில் என்னுடைய பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்ததால், என் மனைவி மூலமாக நான் அதில் பங்குதாரராகத் தொடர விரும்பவில்லை. 1991ல் என் மனைவி அதிலிருந்து வெளியேறினார். அதற்குப் பிறகு தமிழில் எழுத தொடர்ந்து வலியுறுத்திய சோ, தமிழ் இதழியலுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.
அதன் பின், நான் துக்ளக் அணியின் உள்வட்டத்தில் இணைந்தேன். சோவும் நானும் இணைந்து பல அரசியல் வியூகங்களை வகுத்தோம். அவருக்குப் பிறகு நான்தான் வரவேண்டுமென 2007வாக்கில் சோ வலியுறுத்த ஆரம்பித்தார். அவருக்குப் பிறகு, யாரும் அந்தப் பத்திரிகையை வாங்க மாட்டார்கள்; ஆகவே அதை மூடிவிடுவதே நல்லது என்று சொன்னேன்.
சோவுக்குப் பிறகு நான் அதன் ஆசிரியராகாவிட்டாலும்கூட, துக்ளக்கை வைத்திருக்கும் நசிகேதாஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டடின் பங்குதாரராகும்படி அவர் வலியுறுத்த ஆரம்பித்தார். 2008 வாக்கில் நசிகேதாஸ் பப்ளிகேஷன்சில் 50 சதவீத பங்கை வாங்கினேன். அதற்குப் பின், நான்தான் அவருக்குப் பிறகு துக்ளக்கின் ஆசிரியராகத் தொடர்வேன் என கோடிகாட்ட ஆரம்பித்தார் சோ.
சோவுக்குப் பிறகு துக்ளக் இறந்துவிடுமென ஒருநாள் அவரிடம் சொன்னேன். அதனைச் செயல்பட வைக்கும் தன்னம்பிக்கை எப்படிப் பார்த்தாலும் என்னிடம் இல்லையென்றேன். யாரிடமாவது விற்றுவிடும்படி சொன்னேன்.
2013ல் அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தபோது, என் எல்லாப் பங்குகளையும் சோவுக்கு மாற்றிக்கொடுத்தேன். அவருக்குப் பிறகு நான் தொடர மாட்டேன் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கவே இப்படிச் செய்தேன். ஆனால், சோ தொடர்ந்து இதனை வலியுறுத்தினார். அவரால் பேச முடியாதபோது, ஸ்லேட்டில் எழுதிக் காண்பித்தார். ரஜினி உட்பட பலரிடமும் சொல்லி என்னிடம் பேசச்சொன்னார்.
அவர் மறையும்வரை, அவரிடம் இதற்கு 'சரி' என்று சொல்லவில்லை. சோவின் உடல் தகனம் செய்யப்பட்ட அடுத்த நாள், துக்ளக்கின் ஒட்டுமொத்த அணியும் குமுதத்தின் ஆசிரியர் வரதராஜனுடன் வந்து என்னை சந்தித்தனர். குமுதம் அச்சகத்தில்தான் துக்ளக் அச்சடிக்கப்பட்டு வந்தது. அவருக்குப் பிறகு நான்தான் வரவேண்டுமென துக்ளக் அணியிடம் சோ சொல்லியிருந்திருக்கிறார். நான் அதை ஏற்கவில்லையென்றால், மெல்லமெல்ல அதனை மூடிவிடலாம் என்றும் கூறியிருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் நடந்துவந்ததால், நான் அதில் இறங்கத் தீர்மானித்தேன். இப்படித்தான் துக்ளக் எனது கையில் கிடைத்தது. 1986ல் நான் எழுத ஆரம்பித்தபோது, எழுதுவதற்காக ஒரு ரூபாய்கூடப் பெற மாட்டேன் என உறுதியெடுத்துக்கொண்டேன். இப்போது எனது நேரத்தில் 50 சதவீத்தை துக்ளக்கிற்காக செலவழிக்கிறேன். ஆனால், அதிலிருந்து ஒரு பைசாகூட எடுப்பதில்லை.
யாரிடமிருந்தும் எதையும் பறிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. துக்ளக் எனக்கு தேவை என்று நினைத்திருந்தால், 1991ல் அதிலிருந்து நான் விலகியிருக்க மாட்டேன். 2008ல் ஐம்பது சதவீத பங்குகளைக் கொடுத்திருக்க மாட்டேன்." என துக்ளக் இதழ் சோவுக்குப் பிறகு தன் பொறுப்புக்கு வந்தது குறித்து நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார் குருமூர்த்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: