You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமகமதாபாத் நகரில் காங்கிரஸ் - பாஜக சார்பு மாணவர்கள் அமைப்புகளிடையே மோதல் - 10 பேர் காயம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ (NSUI) மற்றும் பாஜக சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
என் எஸ் யு ஐ உறுப்பினர்கள் ஞாயிறன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து, இன்று அகமதாபாத்தில் ஏபிவிபி அலுவலகம் எதிரே போரட்டம் நடத்தினர். அப்போது இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் குஜராத் மாநில என் எஸ் யு ஐ தலைவர் நிகில் சவானிக்கு தலையில் அடிபட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தவிர, என் எஸ் யு ஐ உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தை உடைத்து தங்கள் உறுப்பினர்களை அடித்ததாக ஏ.பி.வி.பி. ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
ஆனால் காவல்துறை நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இரு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றம் சுமத்தினர்.
இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று என்எஸ்யுஐ அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
திங்கள் கிழமை அகமதாபாத் ஐஐஎம் அருகே ஜே.என்.யு வன்முறையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கே வந்த ஏபிவிபி உறுப்பினர்களை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்வு தொடர்பாக கூறியபோது , காவல்துறையினரும் ஏபிவிபி உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் வடகாம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, தமது நண்பர் நிகில் சவானியை ஏ.பி.வி.பி. குண்டர்கள் அடித்ததாகவும், அந்த தாக்குதலை தடுக்க காவல்துறையினர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :