You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி திணிப்பு போராட்டம் முதல் இதுவரை - மாணவர் போராட்டங்களின் வலிமை
- எழுதியவர், அனன்யா தாஸ்
- பதவி, பிபிசி மானிட்டரிங்
இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நகரம், ஊரகம் என்று எவ்வித வேறுபாடுமின்றி நாடுமுழுவதும் மாணவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய போராட்டங்களின்போது, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சட்டங்களும் அரசியலும் ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் அரசமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக கூறி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இத்தகைய போராட்டங்கள் அரசியல் ரீதியிலான மாற்றங்களை எந்த அளவுக்கு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் போராட்டங்கள் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக வரலாறு கூறுகிறது.
மாணவர்களின் போராட்டங்களால் ஏற்பட்ட திருப்புமுனைகள்
கடந்த அறுபது ஆண்டுகளில், மொழி, சாதி, பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவற்றிற்காக மாணவர்கள் முன்னெடுத்த மிகப் பெரும் போராட்டங்களை இந்தியா கண்டுள்ளது. அதாவது, மேற்குறிப்பிட்ட போராட்டங்கள் பெரும்பாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆங்கிலத்தோடு இந்தியையும் நாட்டின் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக மாற்றும் அலுவல்மொழி சட்டம் 1963-ஐ எதிர்த்து 1965ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளான அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது, பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், பல மாணவர்கள் தீக்குளித்தும் துப்பாக்கிச் சூட்டிலும் உயிரிழந்தனர். மேலும், மாநிலம் தழுவிய அளவில் ஏற்பட்ட தொடர் வன்முறையில் 70 பேர் உயிரிழந்தனர்.
1974ஆம் ஆண்டு பிகார் மாநில மாணவர்கள் அம்மாநிலத்தில் ஊழல், தேர்தல், கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அது 'ஜே.பி இயக்கம்' என்று பரவலாக குறிப்பிடப்படுகிறது. நாட்டின் கிழக்கு பகுதியில் தொடங்கிய இந்த போராட்டம், மெல்லமெல்ல வட மாநிலங்களுக்கும் பரவியது.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திரா காந்தி அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்தை எதிர்த்து நாடுமுழுவதும் மாணவர்கள் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தனர்.
1975ஆம் ஆண்டு ஜூன் 26 முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரை அவசரகால பிரகடனம் அமலில் இருந்தபோது, அரசமைப்பு உரிமைகள், பேச்சுரிமை பறிக்கப்பட்டதுடன் பத்திரிகைகளின் செயல்பாடு முடக்கப்பட்டது. தேசத்தின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக அப்போது இந்திரா காந்தி பதிலளித்திருந்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியேறிகளை எதிரான போராட்டத்தை 1979-85 இடைப்பட்ட காலத்தில் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் முன்னெடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து புதிய நாடாக வங்கதேசம் உருவானபோது, அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த குடியேறிகளால் உள்ளூர் மக்களாகிய தங்களது அடையாளம் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசாங்க பணிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து 1990இல் போராட்டங்கள் வெடித்தன.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவருமான ரோஹித் வெமுலா, சாதி அடிப்படையிலான பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போராட்டங்களால் மாணவர்கள் சாதித்தது என்ன?
பல்வேறு சூழ்நிலைகளில் போராட்டங்களின் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவர்கள், அரசியல் கட்டமைப்புகளை மாற்றுவதிலும், அரசாங்கங்களைத் தேர்வு செய்வதிலும், சமூகத்தை மாற்றியமைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தனர்.
இந்தி எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து 1967இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. திராவிட முன்னேற்ற கழகம் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
வட இந்தியாவினால் பரப்ப முயற்சிக்கப்பட்ட ஒற்றை கலாசாரத்தை கருத்தியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டதை இந்த தேர்தல் முடிவு பிரதிபலித்ததாக கருதப்பட்டது.
பிகார் மாநில மாணவர்கள் முன்னெடுத்து, வட இந்தியா முழுவதும் பரவிய போராட்டத்தின் விளைவாக 1977இல் இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி மத்தியில் ஆட்சியை அமைத்தது.
அதுமட்டுமின்றி, இந்த போராட்டத்தின் விளைவாக நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தங்களது பிராந்தியங்களில் முக்கிய இளம் அரசியல் தலைவர்களாக உருவெடுத்தனர்.
இந்தியாவில் அவசரக்காலம் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது இன்னமும்கூட சர்ச்சைக்குள்ளான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் நிலையை வெளிப்படுத்தும் வகையில், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்கள் ஒரே நாளில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின.
1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்புவரை உத்தரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக நிகழ்ந்து வந்த சூழ்நிலையில், அந்த தேர்தலில் அக்கட்சியால் ஒரு தொகுதியை மட்டுமே வெல்லும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசின் பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார்.
அஸ்ஸாமில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1985ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி அஸ்ஸாம் ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், அஸ்ஸாமை சேர்ந்த மக்களின் பாரம்பரியமும், அடையாளமும் பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும், இந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவ தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா, பின்னாளில் அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, பாஜக தனது ஆதரவை விலக்க, 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிரதமர் பதவியை வி.பி. சிங் ராஜிநாமா செய்தார். 1992ஆம் ஆண்டு இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்ததுடன், பின்தங்கிய வர்க்கங்களை அடையாளம் காண சாதி ஒரு காரணியாக இருக்கலாம் என்று தெரிவித்தது.
பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக மயமாக்கலுக்கான சுருங்கிவரும் இடமாக கல்வி நிறுவனங்கள் மாறிவருவதை ரோஹித் வெமுலாவின் தற்கொலையால் தூண்டப்பட்ட போராட்டங்கள் வெளிப்படுத்தியது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் விரைவில் முடிவடையும் என்று சொல்ல முடியாது.
அரசியல், கருத்தியல், பொருளாதார அல்லது தலைமுறை இடைவெளியால் உண்டான இந்தியாவின் சிக்கலான அரசியலில் போட்டியிடும் வலிமைமிக்க சக்திகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்ந்து செழித்து வளரும் என்றே கருதப்படுகிறது.
ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டங்களுக்கு காவல்துறையினர், இணைய முடக்கங்கள், முகமறியும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்திய அரசு கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது. ஆனால், இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம், தங்களுக்கு எதிரான கருத்துகளை ஆளும் பாஜகவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற விமர்சனத்தை மேலோங்க வைத்துள்ளது.
இதற்கு பதிலாக, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்திற்கு இப்போது ஒரு "புதிய அணுகுமுறை" தேவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அப்படி எது நடந்தாலும் அதில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பங்கு அதிகளவில் இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: