You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் 20ல் ஒரு குழந்தை 5 வயதுக்குள் மரணம் - அதிர்ச்சி தரும் ஆய்வு
- எழுதியவர், ஷதாப் நஸ்மி
- பதவி, பிபிசி
ராஜஸ்தானின் கோட்டா நகரத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் சம்பவம் நடந்தேறிய ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த ஆண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலோத் கூறுகிறார்.
2013ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ராஜஸ்தானை பாஜக ஆட்சி செய்தது. இதே ஜே.கே. லோன் மருத்துவமனையில் 2015இல் 1,260, 2016இல் 1193, 2018இல் 1005 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அது கடந்த 2019ம் ஆண்டில் 963ஆக குறைந்துள்ளதாக அசோக் கெலோத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பை தரவுகளோடு ஒப்பிட்டு அதை சர்வ சாதாரணமான வகையில் அரசாங்கம் அணுகுவாக கூறி இதன் காரணமாக சர்ச்சை வெடித்துள்ளது. அதே மாதத்தில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், பிகார் மாநிலத்தில் ஒருவித மூளை அழற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பும், தரவும்
இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும் 30 குழந்தைகள் பிறந்த ஒருசில வாரங்களில் இறப்பதாக 2015-16 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 33 குழந்தைகளிலும் ஒரு குழந்தை தான் பிறந்த நான்கு வாரத்திற்குள்ளாகவே உயிரிழக்கிறது.
அதே சூழ்நிலையில், இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும் 41 பச்சிளம் குழந்தைகளும், ஐந்து வயதிற்குட்பட்ட காலத்தில் 50 குழந்தைகளும் உயிரிழக்கின்றன. அதாவது, இந்தியாவிலுள்ள 20 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது ஐந்தாவது பிறந்த நாளுக்கு முன்னதாகவே இறக்கும் சூழ்நிலை நிலவுவதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
ஆண் குழந்தைகளைவிட அதிகம் இறக்கும் பெண் குழந்தைகள்
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாதிரி பதிவு அறிக்கையின்படி (எஸ்ஆர்எஸ்), இந்திய அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளே அதிகம் இறக்கின்றன.
ஐந்து வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளில் 78 குழந்தைகள் உயிரிழக்கின்றன. அதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 41ஆக உள்ள நிலையில், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 37ஆக உள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில்தான் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் பெண் - ஆண் பாலின வேறுபாடு (16%) அதிகமாக உள்ளது.
5 - 14 வயதுப்பிரிவு
ஐந்து முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட பிரிவில் 0.6% சதவீத இறப்புகள் நிகழ்வதாக 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாதிரி பதிவு அறிக்கை தெரிவிக்கின்றது.
நாட்டின் பெரிய மாநிலங்களிடையே பார்க்கும்போது, கேரளாவில் மிகவும் குறைந்த இறப்பு வீதமும் (0.2%), ஜார்கண்டில் அதிகபட்ச இறப்பு வீதமும் (1.4%) நிலவுகிறது.
1992-93ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், 1000 குழந்தைகளில் 49 குழந்தைகள் தாங்கள் பிறந்த சில வாரங்களிலேயே உயிரிழந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2015-16ல் 30ஆக குறைந்துள்ளது.
அதே சூழ்நிலையில், மேற்குறிப்பிட்டுள்ள காலத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை விட ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகள் சற்றே அதிகமாக குறைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: