குடியுரிமை திருத்த சட்டம்: போராட்டத்தில் பங்கேற்ற நார்வே மூதாட்டியிடம் விசாரணை

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட நார்வே பெண்ணிடம் விசாரணை

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நார்வே நாட்டை சேர்ந்த 71 வயது மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரை விசாரிக்க கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் பதிவு அலுவலகத்திற்கு அந்த மூதாட்டி அழைக்கப்பட்டார்.

யானே மெட்டே ஜொஹன்சன் இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரது விசா 2020 மார்ச் மாதம் முடிவடைகிறது.

இவரிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை தெரிவிக்க குடியேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனினும், இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணியாக வருபவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என விதி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய யானே, "குடியுரிமை திருத்த சட்டத்திற்கான போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. அங்கு அமைதியை வலியுறுத்தி பாடல்கள் பாடப்பட்டன. கவிதைகள் வாசிக்கப்பட்டன. எந்த விதமான வன்முறையோ கலவரமோ நடைபெறவில்லை. அது எப்படி இந்திய சட்டத்தை மீறுவதாக இருக்கும் என்று தெரியவில்லை," என தெரிவித்தார்.

தினமலர்: மாற்றுத் திறனாளி குழந்தைகளை கழுத்து வரை புதைத்த பெற்றோர்

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளை கழுத்து வரை மண்ணில் புதைத்த மூட நம்பிக்கை சம்பவம், கர்நாடகாவில் நடந்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் வட மாவட்டங்களான கலபுரகி, ராய்ச்சூர், விஜயபுரா போன்ற பின்தங்கிய மாவட்டங்களில், மாற்றுத் திறனாளிகள் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்டனர். சூரிய கிரகணம் முடியும் வரை, அவர்களது பெற்றோரும் அங்கேயே காத்திருந்தனர். சிறு குழந்தைகள் முடியவில்லை என்று அலறியும், அவர்களை மேலே எடுக்கவில்லை.

சூரிய கிரகணத்தின் போது, மாற்றுத் திறனாளிகளை மண்ணில் புதைத்தால், ஊனம் குணமாகும் என, அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதற்கு, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

தினமணி: "தமிழகத்தின் வளா்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம்"

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுனாமி தாக்குதலின்போது உயிரிழந்தவா்களுக்கு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவக் கல்லூரிகள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் என பலவகையிலும் தமிழத்துக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்துவதற்காகவே மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காத போதும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் வெற்றியடைந்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: