You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜகவில் இருந்துகொண்டே குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன்
பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில துணை தலைவர் சந்திர குமார் போஸ் இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விமரிசித்துள்ளார். இவர் விடுதலைப் போராட்ட வீரரும் சுபாஷ் சந்திர போஸின் சகோதரருமான சரத் சந்திர போஸின் பேரன் ஆவார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எந்த மதத்துடனும் தொடர்பில்லை என்றால் அதில் ஏன் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சமணர் மற்றும் பார்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதில் ஏன் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்றும் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட வேண்டாம். இது அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடு என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
"முஸ்லிம்கள் தங்கள் நாட்டில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றால் அவர்கள் இங்கு வர மாட்டார்கள். அவர்களையும் சேர்ந்துக்கொள்வதில் தவறில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பலூச் இன மக்களின் நிலை என்ன? பாகிஸ்தானில் உள்ள அகமதியா மக்களின் நிலை என்ன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர குமார் போஸ் 2016இல் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
பலூசி இன மக்கள் மற்றும் அகமதியாக்கள் யார்?
பலூசி இன மக்கள் வாழும் பலூச்சிஸ்தான் பிராந்தியம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பகுதிகளில் பரவியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலூச்சிஸ்தானில் பல பத்தாண்டுகளாக ஆயுதக் குழுக்களின் பிரிவினைவாதப் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபின் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் மிக நீண்ட உள்நாட்டு ஆயுதப் போராட்டமாக இது உள்ளது.
அந்தப் பகுதியில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஆயுதப்படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போனதாகவும் கொல்லப்பட்டுள்ளதகவும் குற்றச்சாட்டுகளும் போராட்டங்களும் அங்கு தொடர்ந்து நடந்து வருகின்றன.
எனினும் பலூச்சிஸ்தான் பிராந்தியத்தில் நடக்கும் வன்முறைகள் மற்றும் மரணங்களுக்கு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதால் நிகழ்வது என்று பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.
அதேபோல அகமதியா இன மக்களும் பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
1835இல் பிறந்த மிர்ஸா குலாம் அகமது என்பவரால் அகமதியா மதக் குழு நிறுவப்பட்டது. நபிகள் நாயகமே கடைசி இறைத் தூதர் என்று நம்பும் பாரம்பரிய இஸ்லாமியர்கள், இன்னொருவரையும் இறைத் தூதராக ஏற்றுக்கொண்டுள்ள அகமதியா மக்களை இஸ்லாமியர்களாக கருதுவதில்லை.
தாங்களும் இஸ்லாமியர்கள்தான் என்று அகமதியா மக்கள் கூறினாலும் அவர்களுக்கான மத அங்கீகாரம் மறுக்கப்படுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: