"சிகிச்சைக்கு பணம் இல்லை" - மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "சிகிச்சைக்கு பணம் இல்லை - மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி"

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர், தனது மனைவியை உயிருடன் புதைத்த சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்தவர் துக்காராம் (வயது 46) கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி தான்வி (44) நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவருக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. அதற்கு துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகில் அவரது மனைவியை உயிருடன் புதைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்காராமை கைது செய்து விசாரணை நடத்தி, உயிருடன் புதைக்கப்பட்ட தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ்: "ஈக்வேடாரிலும் நித்யானந்தா இல்லை"

நித்யானந்தா

பட மூலாதாரம், Getty Images

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் ஏதும் வழங்கவில்லை எனவும் அவருக்கு தீவையும் விற்கவில்லை எனவும் ஈகுவடார் நாடு விளக்கம் அளித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதில், ஈகுவடாரில் உள்ள ஒரு தீவானது 'ரிபப்ளிக் ஆப் கைலாசா' என்ற இந்து நாடாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் கைலாசாவுக்கென தனிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் ''நித்யானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்படவில்லை. அதுபோலவே, நித்யானந்தாவுக்கு ஈகுவடார் அருகே தீவு எதையும் விற்கவில்லை. இதுதொடர்பாக அவர் சார்பாக இணையதளங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை. அதில் உண்மையில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

கோலியின் அதிரடியில் வென்ற இந்தியா - 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'

கோலி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோலி

ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

வெள்ளிக்கிழமையன்று இந்தியா-மேற்கிந்திய தீவுகள்அணிகள் இடையிலான முதலாவது டி20போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட்மேயர் 56 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து இந்தியா பேட் செய்தபோது தொடக்க வீரர் ரோகித்சர்மா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் விராட் கோலி தனது அதிரடி பாணியில் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

கே.எல். ராகுல் 62 ரன்கள் சேர்த்தார். இதனால் 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: