You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேட்டுப்பாளையம்: 17 பேரை பலி கொண்ட சுவரின் எஞ்சிய பாகங்களை இடிக்கிறது நகராட்சி
கோவை, மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரை பலி கொண்ட சுவர் தற்போது இடிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் உள்ள இந்த சுவரை தற்போது நகராட்சி இடிக்கிறது.
தலித் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியையும், நான்கு ஆடம்பர வீடுகள் உள்ள பகுதியையும் பிரிக்கும் வகையில் இந்த சுவர் கட்டப்பட்டிருந்தது.
கருங்கல்லில் மட்டுமே கட்டப்பட்ட இந்த சுவரின் ஒரு பாகம் மழையில் இடிந்து விழுந்தபோதுதான் நான்கு வீடுகள் நொறுங்கி 17 தலித் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சுவரின் மற்றொரு பகுதியை இடிக்கும்படி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
தீண்டாமை சுவர் என விமர்சிக்கப்பட்ட இச்சுவர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி டிசம்பர் 5ம் தேதி காலை இடிக்கப்பட்டுவருகிறது.
தலித் மக்கள் வசிக்கும் பகுதியையும் இந்த ஆடம்பர வீடுகள் இருக்கும் பகுதியையும் பிரிக்கும் சுவர் 570 அடி நீளம் உள்ளது.
இதில் சுமார் 80 முதல் 100 அடி நீளமுள்ள, முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட சுவர்தான் வீடுகளின் மீது விழுந்து உயிர்களை பலி கொண்டது. இதன் உயரம் சுமார் 20 முதல் 25 அடி. இந்த சுவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்ரமணியன் வீட்டுக்கு உரியது.
மீதமுள்ள சுவர்தான் தற்போது இடிக்கப்படுகிறது. இந்த மீதச் சுவர் வேறு மூன்று சகோதரர்களுடைய வீடுகளுக்கு உரியது.
இந்த மீதச் சுவரின் ஒரு பாகம் கீழே கருங்கல்லும் மேலே ஹாலோ பிளாக் கற்களும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பாகம் முழுவதும் ஹாலோபிளாக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
தற்போது இடிக்கப்படும் மீதமுள்ள சுவரின் பாகம் 13 அடி, 15 அடி மற்றும் 20 அடி என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உயரத்தில் அமைந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார் செய்தியாளர் ஹரிஹரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: