You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வு: பிறந்தநாள் கொண்டாட பூங்கா சென்றவருக்கு கொடுமை, நால்வர் கைது
கோவையில் பிளஸ் ஒன் படித்து வரும் 17 வயது மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 பேர் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளது, என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து, அவரது தாய் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியை மிரட்டி வன்புணர்வு செய்த கும்பலை இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்ற போலீஸ் படை தேடிவந்தது.
இந்நிலையில், மாணவியை கூட்டு வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், வன்புணர்வு, கொலை மிரட்டல் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர், கைது செய்யபட்டவர்களை பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
"பூங்காவில் இருந்த மாணவியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.
சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்