You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா?
- எழுதியவர், பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன்
- பதவி, சாலிஸ்பரி பல்கலைக்கழகம், மேரிலாந்து
(இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே.
தேர்தல் முடிவுகளின் முக்கியமானதொரு பரிமாணம் தமிழ் பிரதேசங்களில் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆகும். தமிழ் மக்கள் பெரும்பன்மையாக வாழும் பிரதேசங்களில் அவர் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
உதாரணமாக யாழ்பாண மாவட்டத்தில் சஜித் 83.86% வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ஷ 6.24% வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். வன்னி மாவட்டத்தில் இருவரும் முறையே 82.12 மற்றும் 12.27 சதவிகித வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அரசியலில் போதிய அறிமுகமற்ற ஒருவர் தேர்தல் முடிவுகள் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு இருந்ததை காட்டுவதாக புரிந்துகொள்ளக் கூடும். உண்மையில் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய ஒரு ஆதரவு இருந்ததாக கூற முடியாது.
பொதுவாக அவர் சிங்கள-பௌத்த தேசிய வாதத்தை பிரதிபலிப்பவரகவே இருந்தார். அத்துடன், அவரது அரசியல் செயற்பாடுகள் மிக அண்மைக்காலம் வரை சிங்களப் பிராந்தியங்களில் மையம் கொண்டதாகவே இருந்தது. தமிழ் அரசியலில் அல்லாது பிரச்சனைகளில் அவர் போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
இத்தகைய பின்னணியிலும் மிகப்பெரிய அளவில் பிரேமதாச தமிழ்ப் பகுதிகளில் வெற்றியடைந்தமைக்கான காரணம் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்சமே ஆகும். சுருக்கமாக கூறுவதானால், தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் `அச்ச` வாக்குகளே அன்றி பிரேமதாசவுக்கு ஆதரவான வாக்குகள் அல்ல.
தமிழ் எதிர்பார்ப்பு
இப்போது தேர்தலில் கோட்டாபய மிக இலகுவாக வெற்றி பெற்றுள்ள பின்னணியில் தமிழ் பிரச்சனைகளை புதிய ஜனாதிபதி எவ்விதம் கையாளப் போகிறார் என்கிற ஒரு எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளன.
தமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு எதிராக உறுதியாக வாக்களித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படலாம் என்கின்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகிறது. தமிழ் மக்கள் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பது பொதுஜன பெரமுனவுக்கு நீண்ட காலத்தில் ஒரு பிரச்சனையாக அமையக்கூடும். எனவே, இவ்வச்சத்தில் ஓர் அடிப்படை இல்லாமல் இருக்கவில்லை.
தமிழ் வாக்களிப்பு பிரச்சனையை கையாள்வதற்கு புதிய அரசாங்கத்திற்கு இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. ஒன்று, தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை சிதைப்பதன் மூலம் தமிழ் வாக்குகளை பலவீனப்படுத்துவது. இரண்டு, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளையும் அச்சங்களையும் தீர்ப்பதன் மூலம் அவர்களது அதரவைப் பெறுவது.
இவ்விரண்டு வழிமுறைகளில் எதனை அரசாங்கம் கடைபிடிக்கப் போகின்றது என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்டதன் பின் வெளியிட்ட கூற்றுகளின் அடிப்படையில் நோக்குகையில் கவனம் செலுத்தப்படுமாயின் அது ஆச்சரியப்படுத்துவதாக இருக்காது.
அரசியல் தீர்வு
தேர்தலில் பிரேமதாசவுக்கு உத்தியோக பூர்வமாக ஆதரவு அளித்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவர்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. கடந்தகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இவ்விடயத்தில் கூட்டமைப்பு ஏமாற்றமடையப் போவதாகவே தோன்றுகிறது.
தென்-இலங்கை தேசியவாதிகள் பொதுவாகவே தமிழ் மக்களுக்கு விசேடமான பிரச்சனைகள் எதுவும் காணப்படவில்லை என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். எனவே, அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் இவ்வரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் கூட்டமைப்பை தமிழ் மக்களின் `ஏக பிரதிநிதிகளாக` அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
எனவே, பேச்சுவார்த்தை என்று ஆரம்பிக்கப்படுமாயின் அது பல தமிழ் கட்சிகளுடன் என்ற அடிப்படையிலேயே பிரதிபலிக்கப்படும். குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி உள்வாங்கப்படும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போலவே, கூட்டமைப்பும் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியிருகின்றமையால் பல கட்சி பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு இணங்கப் போவது இல்லை.
எனவே, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பவை சாத்தியமற்றதாகவே இருக்கும்.
கூட்டமைப்பு அபிவிருத்தி
உடனடி பின்-யுத்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் வட-கிழக்கு பகுதியில் பாரிய கட்டமைப்பு அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்தது. இதற்கான ஒரு காரணம், தமிழ் மக்கள் இலங்கையின் ஏனைய குழுக்களைப் போல `அபிவிருத்தி` பிரச்னை ஒன்றையே கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கை ஆகும். எனவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, கோட்டாபய அரசாங்கமும் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிலேயே கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை இன நல்லிணக்கத்திற்கு பிரதான ஊடகமாக பயன்படுத்தி இருந்தது. இருப்பினும் இவ்வகை அணுகுமுறையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர்கள் அளித்த வாக்குகள் இதன் பிரதிபலிப்பாகவும் இருந்தன. எனவே, இந்த அரசாங்கத்தின்கீழ் முன்னெடுக்கப்படக்கூடிய கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் எந்த அளவுக்கு இனங்களுக்கு இடையிலான உறவை பலபடுத்த உதவும் என்பது சந்தேகத்திற்கிடமானதே.
இந்தியா-சீனா
புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள மற்றுமோர் கேள்வி, வெளி விவகாரக் கொள்கை தொடர்பிலானது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னணியில் மகிந்த ராஜபக்ஷ அரசங்கம் தீவிர மட்டத்தில் சீனா சார்ந்த வெளி விவகாரக்கொள்கையை கடைபிடிக்கத் தொடங்கி இருந்தது.
அத்துடன் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு பிரதான நாடுகளும் ஓரம்கட்டப்பட்டிருந்தன. இத்தகைய பின்னணியிலேயே கோட்டாபயவின் வெளி விவகாரக்கொள்கை பற்றிய கேள்வி மேலெழுந்துள்ளது.
புதிய அரசாங்கம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையை கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இத்திட்டங்களுக்கு சீனாவின் கடன் உதவிகள் இன்றியமையாதவை. யதார்த்தம் என்னவெனில், இவ்விடயத்தில் இந்தியாவோ, அமெரிக்காவோ சீனாவுடன் போட்டியிட முடியாது என்பதாகும்.
எனவே, தவிர்க்க முடியாதபடி புதிய அரசாங்கம் சீனா சார்பான ஒரு கொள்கையையே முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், ராஜபக்ஷ அரசாங்கம் 2015ம் ஆண்டு ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்கக்கூடும். அது, இந்தியாவை முழுமையாக ஓரம்கட்டுவது ஆரோக்கியமனது அல்ல என்பதாகும்.
எனவே, சீனா சார்பாக இருந்த போதிலும், இந்தியாவின் கரிசனைகளை கவனத்தில் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இன்னொரு வகையில் கூறுவதாயின் இந்தியாவை பகைத்துக்கொள்ளாத சீனச் சார்பு கொள்கை ஒன்று முன்னெடுக்கப்படலாம்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் பயணம் செய்வதற்கான முதலாவது இடமாக புதுடெல்லி தேர்வு செய்யப்பட்டமை இதன் ஓர் அறிகுறியாக இருக்கக்கூடும்.
பிற செய்திகள் :
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- அஜித் பவாரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மீண்டும் துணை முதல்வர் ஆவாரா?
- கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு: பிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்
- தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
- கட்டாய முகாம்களில் வீகர் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யும் சீனா - நடப்பது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்