அஜித் பவாரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மீண்டும் துணை முதல்வர் ஆவாரா?

    • எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்காளே,
    • பதவி, பிபிசி மராத்தி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் செவ்வாய்க்கிழமை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இரவில் சரத் பவாரை சந்திக்க அவரது வீட்டுக்கே அஜித் பவார் சென்றார்,

அதன் பின்னர் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. கட்சியில் அஜித் பவார் தனது நிலையை உறுதிப்படுத்தி கொள்வாரா? அடுத்த அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படுமா? அஜித் பவார் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிடுவாரா?

இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடைகளை காண்போமா.

நம்பகத்தன்மை இழப்பா?

இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் மூலம் அஜித் பவார் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் ரஹி பைதே.

"ஒருநாள் கூட்டத்தை விட்டு திடீரென விலகுகிறார். இன்னொரு நாள் தனது பதவியில் இருந்து விலகுகிறார். இதுவே அஜித் பவாரின் நடத்தையாக எப்போதும் உள்ளது. சரத் பவார் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளலாம். அமைச்சர் பொறுப்பும் அவருக்கு கிடைக்கலாம். அஜித் பவாருக்காக வேலை செய்பவர்கள் அவர் இவ்வாறு செயல்படுவதை விரும்பலாம். ஆனால், கட்சியின் தொண்டர்கள் அவரது நடவடிக்கையை விரும்பவில்லை" என்கிறார் ரஹி பைதே.

மேலும் இது பற்றி கூறுகையில், "அஜித் பவார் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். ஒருபுறம் மூன்று கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பது பற்றி விவாதிக்கின்றன. மறுபுறம் இரவோடு இரவாக பாரதிய ஜனதா கட்சியோடு திருட்டுத்தனமாக அஜித் பவார் இணைந்து துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார். நீர்ப்பாசன திட்ட ஊழல் தொடர்பான விசாரணையை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சி அவரை பயமுறுத்தியிருக்கும். அதனால், அவர்களின் கோரிக்கைக்கு ஒப்பு கொண்டிருப்பார். கடந்த இரண்டு நாட்களில் எட்டு, ஒன்பது ஊழல் கோப்புகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன" என்கிறார்.

ஆனால், நீர்ப்பாசன திட்ட ஊழலில், அஜித் பவார் சுத்தமானவரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அஜித் பவாருக்கு மாற்று யாரும் இல்லையா?

அஜித் பவார் இல்லாமல் தேசியவாத காங்கிரஸ் கட்சி வளர முடியாது என்று தெரிவிக்கிறார் பிரகாஷ் பவார்.

"அஜித் பவாரை வரவேற்காவிட்டால், தேசியவாத காங்கிரஸ் கட்சி வளர முடியாது. எனவே அஜித் பவாரை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வதை தவிர சரத் பவாருக்கு வேறு வழியில்லை. ஆனால், அஜித் பவார் மீது சரத் பவார் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும்" என்று பிரகாஷ் பவார் கூறுகிறார்.

"அஜித் பவாரை கட்சியில் இருந்து விரட்டுவதற்கு தேசியவாத கட்சிக்குள் ஓரணி உள்ளது. அஜித் பவாரை ஆதரிக்கும், எதிர்க்கும் என இரண்டு அணிகள் தேசியவாத காங்கிரஸில் உள்ளன. கட்சியை உடைப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அஜித் பவார் வலிமையான தலைவர். அவர் முடிவு செய்தால் தனியொரு கட்சியை தொடங்க முடியும். அவருக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளனர்" என்கிறார் அவர்.

அரசியலை விட்டு சென்று விடுவாரா?

"அஜித் பவாரின் மனோபாவமே அரசியல் என்பதால், அவர் அரசியலுக்கு முழுக்கு போடமாட்டார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீமண்ட் மானே.

"அஜித் பவாரின் மனோபாவமே அரசியல் என்பதால், அவர் அரசியலுக்கு முழுக்கு போடுவார் என்று நான் கருதவில்லை. தேசியவாத காங்கிரஸில் அவர் மீது சந்தேகம் நிலவுவதால், அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படாது. எனவே, அவருக்கும், தனஞ்சய் முண்டேவுக்கும் புதிய அமைச்சில் எளிதில் இடமளிக்க மாட்டார்கள்" என்று கருதுவதாக ஸ்ரீமண்ட் கூறுகிறார்.

"தலைமை பொறுப்பு பெறுவதற்கு அஜித் பவார் இனி போராட வேண்டியிருக்கும். இத்தகைய தீவிர முடிவை அஜித் பவார் எடுப்பது இது முதல் முறையல்ல. சிறுகுழந்தை தனமாக அவர் அடிக்கடி செயல்பட்டுள்ளார். அவரது நடத்தை சரத் பவாருக்கு எப்போதும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரத் பவாரின் இந்த வயதில் அஜித் பவார் இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல. சரத் பவாரும் இதனை விரும்பவில்லை. சரத் பவாருக்கு அண்ணன் மகன் என்பதால் அஜித் பவார் தனக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கட்சியின் பிற தலைவர்கள் கருதுகின்றனர். எனவே கட்சியில் தன்னுடைய தலைமையை நிறுவிக்கொள்ள அஜித் பவார் இனி போராட வேண்டியிருக்கும்" என்று ஸ்ரீமண்ட் தெரிவிக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மரே கருத்து தெரிவிக்கையில், "அரசியலுக்கு முழுக்கு போடுவதை தவிர அஜித் பவாருக்கு வேறு வழியில்லை. அமலாக்க துறையின் விசாரணையில் அவர் நடுங்கி போய்விட்டார். அப்போதிருந்தே சரத் பவாரும் மகிழ்ச்சியாக இல்லை. அஜித் பவாரே அரசியலில் இருந்து வெளியேற வழியை ஏற்படுத்தி விவசாயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வழியில்தான் அவர் செல்வார்" என்கிறார்.

அரசியல் தற்கொலையா?

"துணை முதல்வராக பதவி ஏற்பதை சரத் பவாருக்கு தெரியாமல் அஜித் பவார் வைத்திருந்தார். அஜித்தின் அரசியல் வாழ்க்கை குறைந்து வருவதற்கான அடையாளம் இது. பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்த்து, அரசு அமைக்க சென்றது ஒரு தற்கொலை முயற்சி என்று விஜய் சோர்மரே தெரிவிக்கிறார்.

"அஜித் பவாரின் இத்தகைய நடவடிக்கை அரசியல் ரீதியாக அவரை 10 ஆண்டுகளின் பின்னடைவை வழங்கியுள்ளது. மகாராஷ்ரா மாநிலம் தோல்வியை ஏற்றுகொள்கிறது. ஆனால் காட்டிக்கொடுப்பவரை அது ஏற்பதில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை அஜித் பவார் புறந்தள்ளி, அவர்களை காட்டிக்கொடுத்துவிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி அவருக்கு நல்ல மதிப்புமிக்க பொறுப்பை மீண்டும் கொடுப்பதாக இருந்தால், அது கட்சிக்கு சேதங்களை உண்டாக்கும்" என்று விஜய் சோர்மரே கூறுகிறார்.

வழக்கு விசாரணைகள் என்னவாகும்?

நீர்ப்பாசன திட்டத்திலும், மாநில கூட்டுறவு வங்கியிலும் ஊழல் செய்ததாக அஜித் பவார் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகிறார். விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளுக்கு என்னவாகும் என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை.

"அஜித் பவாருக்கு எதிரான விசாரணைகளால் எதுவும் நடக்கபோவதில்லை. நீர்ப்பாசன திட்ட ஊழல் குற்றப்பத்திரிகையை நான் முழுமையாக வாசித்திருக்கிறேன். அமலாக்க துறை அதில் எதையும் கண்டறிய போவதில்லை. எதிர்க்கட்சியை அச்சுறுத்தவதற்கு மட்டுமே மத்திய அரசு இதனை பயன்படுத்துகிறது" என்கிறார் அரசியல் ஆய்வாளர் பிரகாஷ் பவார்.

ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீமண்ட் மானே, "தேசியவாத காங்கிரஸ் அரசில் பங்குபெறும் நிலையில், அஜித் பவாரை சிக்கலான நிலைமைக்கு தள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது. இந்த விசாரணைகள் மொதுவாக நடைபெறும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: