சீனாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தலா? - காணொளியை நீக்கியதற்கு டிக்டாக் மன்னிப்பு மற்றும் பிற செய்திகள்

சீனாவில் வீகர் இன முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்தை விமர்சிக்கும் வகையில் டிக்டாக் செயலியில் காணொளி வெளியிட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணின் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சீனாவை சேர்ந்த டிக்டாக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிக்டாக் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த 17 வயதான பெரோசா அசிஸ் மீது ஏற்கனவே மற்றொரு காணொளி தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் சீனாவின் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது குறிப்பிட்ட காணொளி நீக்கப்பட்டதற்கு 'மனித தவறுகளே' காரணம் என்று அந்நிறுவனம் விளக்கமளித்துளளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்த பைட்டான்ஸ் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக், தங்களது உள்நாட்டு (சீனா) உள்ளடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் சீனாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கு பொருந்தாது என்று கூறுகிறது.

எனினும், டிக்டாக் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசிஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த உத்தவ் தாக்கரே?

1996-97-ம் ஆண்டு. மும்பையின் தாதரில் பேட்மின்டன் விளையாட ராஜ் தாக்கரே செல்வது வழக்கம். பின்னர். தனது உறவு முறை அண்ணன் உத்தவ் தாக்கரேயை தன்னோடு விளையாட அவர் அழைத்தார்.

விளையாடியபோது, உத்தவ் தாக்ரே விளையாட்டு மைதானத்தில் தவறி விழுந்தார், அதனை பார்த்து ராஜ் தாக்ரேயும், அவரது நண்பர்களும் சிரித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அந்த பேட்மின்டன் மைதானத்திற்கு விளையாடச் செல்வதை உத்தவ் தாக்ரே நிறுத்திவிட்டார். அவர் பேட்மின்டன் விளையாடுவதையே நிறுத்திவிட்டார் என்று அனைவரும் எண்ணினர்.

இலங்கையில் மாவீரர் தினம் அனுசரிப்பு

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் நேற்று (புதன்கிழமை) இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.

கோட்டாபய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம் பெறாதது ஏன்?

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் - அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

அமித்ஷா அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்?

கடந்த ஒரு வாரமாக இந்திய அரசியலில் மிகவும் விவாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில அரசியல் சர்ச்சைகள், முதல்வர் தேவேந்திர பட்னா விஸின் ராஜிநாமா மற்றும் சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் விடுத்த அழைப்பு ஆகியவற்றால் தற்போதைக்கு முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று யாருமே எதிர்பாராவிதமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: