You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த அரசுப் பள்ளி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்
ஒரு லிட்டர் பாலை அதிக அளவு தண்ணீரில் கலந்து 81 அரசு பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா மாவட்ட சலைய் பான்வா அரசு தொடக்கப் பள்ளியில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று மிக வைரலாக பகிரப்பட்டது.
பெரியதொரு அலுமினிய பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீரைச் சூடாக்கும் சமைக்கும் பெண்ணொருவர், அதில் ஒரு லிட்டர் பாலை கலந்து பாதி குவளை அளவு பாலை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குவது இந்த காணொளியில் தெரிகிறது,
மதிய உணவின்போது தண்ணீரில் பாலை கலந்து கொடுக்கும் இந்த காணொளி வைரலாக பரவிய பின்மா வட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசு ஆணையிட்டுள்ளபடி புதன்கிழமை மதிய உணவில் சோறும், பாலும் வழங்கப்பட மாணவர்களுக்கு வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் 150 மில்லிலிட்டர் பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஷிக்ஷா மித்ரா ஆசிரியை மீது இந்தியக் குற்றவியல் பிரிவு 408-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து தமிழ்: "ரூ.125 பண பாக்கிக்காக நண்பரைக் கொன்றவர் கைது"
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ராபர்ட் (40). விழுப்புரம் மாவட்டம் கீழ் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (30). நண்பர்களான இருவரும் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வந்தனர். கே.கே.நகர் சாலையில் உள்ள நடைபாதையில் இருவரும் தங்கி இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமாரிடம் ராபர்ட் ரூ.250 கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.125-ஐ திருப்பிக் கொடுத்தவர், மீதியைத் தராமல் இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் மது அருந்தியபடியே இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, பணம் பாக்கி சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமார் தன் கையிலிருந்த மது பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராபர்ட் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், கே.கே.நகர் போலீஸார் வந்து, சிவக்குமாரை கைது செய்தனர். ராபர்ட் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி: தமிழக கிராமங்கள் கடலுக்குள் மூழ்குகின்றனவா?
தமிழகத்தில் கடலுக்குள் கிராமங்கள் மூழ்கி வருவதாகக் கூறுவதில் உண்மையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல்,வனம், பருவகால மாற்றம் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கேள்வி எழுப்பினார். அவா் பேசுகையில், 'தமிழகம் மிகப் பரந்த கடலோரப் பகுதியைக் கொண்டது. கடல் அரிப்பு, உப்பு நீா் நிலத்தடி நீரில் ஊடுருவல் ஆகியவை காரணமாகப் பெரிய பாதிப்பால் மக்கள் துயருற்று வருகின்றனர். கிராமங்களைப் பாதுகாக்கச் சிறிய சுவர்கள் இருந்தாலும், ஒரே இரவிலேயே கடல் நீரில் கிராமங்கள் மூழ்கி வருகின்றன. இதைத் தடுக்க நீண்டகாலத் திட்டங்கள் என்ன உள்ளன. விளைவு ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பதில் அளித்துப் பேசியதாவது: சென்னையில் தேசிய கடலோர மண்டல நிர்வாக கல்வி நிறுவனத்தில் ஆய்வகம் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வகத்தில் கடலோரம் குறித்த தகவல்கள் உள்ளன. அங்கு உறுப்பினர்கள் பார்வையிடலாம். தமிழகத்தில் 500 கிலோ மீட்டா் தூரத்திற்கு மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. 1,600 ஹெக்டோ் பரப்பளவில் புதிய தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடலுக்குள் கிராமங்கள் மூழ்கி வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அதுபோன்ற புகார் ஏதும் இல்லை' என்றார்.
அதற்குக் கனிமொழி எம்பி, 'எனது தொகுதியில் கடலில் கிராமங்கள் மூழ்கியுள்ளதை நானே பார்த்திருக்கிறேன்' என்றார். அதற்கு 'அது தொடர்பான தகவல்களைத் தெரிவித்தால் ஒரு சிறப்புக் குழுவை அங்கு அனுப்புகிறேன்' என்று அமைச்சா் தெரிவித்தார்.
தினத்தந்தி: தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வாரத்துக்குள் புதிய தலைவர்
தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வாரத்துக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் 'தென் இந்தியாவின் எதிர்கால அரசியல்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
"இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீனவர்கள் நலனை பேணிக்காக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளின் மீனவர்கள் பிரச்சினையை சரி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜே.பி.நட்டா நாளை (இன்று) சென்னை வருகிறார். கட்சியின் முக்கிய தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தல், தமிழக பா.ஜ.க.வுக்கு மாநில தலைவரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் ஆலோசனை செய்ய உள்ளார். இதேபோல வருங்காலத்தில் பா.ஜ.க.வின் பணிகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.
தமிழகம் முக்கிய மாநிலம் மட்டும் அல்ல, சவாலான மாநிலமும் கூட. தற்போது வரையிலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடருகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது. வெளிப்படையாக இப்போது எதுவும் சொல்ல முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வார காலத்துக்குள் தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்போம்.
தி.மு.க. போல குடும்ப உறுப்பினர்களை தலைவராக தேர்ந்தெடுக்கமாட்டோம். தி.மு.க.வை பொறுத்தமட்டில் அவர்களே நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். ஆனால் நாங்கள் கட்சி தொண்டர்கள் இடையே தேர்தல் நடத்தி தான் தலைவரை தேர்ந்தெடுப்போம்." என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்