அமேசான் தளத்தில் பொருள் வாங்குபவரா நீங்கள்? - இதனைத் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் பிற செய்திகள்

அமேசான் பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கு எதிராகப் போராட்டம்

அமேசான் ப்ளாக் ஃப்ரைடே விற்பனைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

ப்ளாக் ஃப்ரைடே விற்பனையானது நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்றும், இது சூழலியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்றும், இதன் காரணமாகவே தாங்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு பாரீஸில் உள்ள அமேசான் தலைமை அலுவலகத்தில் கூடி இந்தப் போராடத்தை நடத்தினர். பிபிசியிடம் பேசிய அமேசான் நிறுவனம், தாங்கள் மக்களின் போராடும் உரிமையை மதிக்கிறோம். ஆனால், இந்த தனி நபர்களின் செயல்களை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

ஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே மாநகரில் இன்னோர் இளம் பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட நிலையில், இன்று, வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்துள்ளனர்.

இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர் படகுகள்: நல்ல நிலையில் திரும்பக் கிடைக்குமா?

இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்தைக்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு படகை இழந்த விசைப்படகு உரிமையாளர் அருளானந்தம் உடன் பிபிசி தமிழ் பேசியது. தனக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார் அருளானந்தம்.

பாலியல் வல்லுறவு, கொலை: பெண் கால்நடை மருத்துவரின் கடைசி உரையாடல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரு லாரி ஓட்டுநர்களும் இரு லாரி கிளீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட இளம் பெண் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மஹபூப்நகர் மாவட்டத்தின் நவாப்பேட்டையில் பணிபுரிந்து வருந்தார்.

கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் - போராடும் வடமாநில இளைஞர்

கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார்.

கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் டோஹானா கிராமத்தில் இருந்து இது குறித்து பிபிசியின் கீதா பாண்டே செய்தி அளிக்கிறார்.

''நாத்திகர்'' என்று பொருள்படும் 'ATHIEST' எனும் ஆங்கிலச் சொல்லை இரண்டு கைகளிலும் பெரிதாக பச்சை குத்தியுள்ள 33 வயதான ரவிக்குமார், கடவுள் இல்லை என்பதை தனது ஆறு அல்லது ஏழாவது வயதில் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: