நிா்மலா சீதாராமன்: "பொருளாதார மந்தநிலையும் இல்லை; ஏழைகளுக்கு பிரச்சனையுமில்லை"

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "பொருளாதார மந்தநிலையும் இல்லை; ஏழைகளுக்கு பிரச்சனையுமில்லை" - நிா்மலா சீதாராமன்
நமது நாட்டில் பொருளாதார வளா்ச்சியின் வேகம் சிறிது குறைந்திருக்கலாம்; ஆனால் பொருளாதார மந்தநிலை ஏதுமில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பாஜக ஆட்சி அமைத்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாகவே உள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இதனால், ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் எவ்வித பிரச்னையுமின்றி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. நாட்டின் வளா்ச்சிக்கு காரணமாக இருக்கும் முக்கியத் துறைகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன.
நாட்டில் பணப்புழக்கம் சீராக உள்ளது. பொருளாதாரம் சுணங்குகிறது என்றால் முதலில் பணப்புழக்கம்தான் குறையும். ஆனால், அப்படி எந்த சூழ்நிலையும் உருவாகவில்லை" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்"

பட மூலாதாரம், Getty Images
5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் தான் இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கும், 8-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் என அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படும்.
எளிதாகவே வினாக்கள் இருக்கும். கல்வித்திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடக்கும். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு ஏதுவாக, ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக ஆசிரியர்களுக்கு 1,000 வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது" என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "தனியார் மயமாக்கல் தோல்வி அடைந்தால் ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும்"

பட மூலாதாரம், Getty Images
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் தோல்வி அடைந்தால் மூடப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) தெரிவித்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஏர் இந்தியா நிறுவனம் ரூ.58 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மக்களவையில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி, விற்பனை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தால், ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும்" என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்கப்போகும் உத்தவ் தாக்கரே யார்? இவரது பின்னணி என்ன?
- சீனாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தலா? - காணொளியை நீக்கியதற்கு டிக்டாக் மன்னிப்பு
- இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
- கோட்டாபய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம் பெறாதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












