You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை: அஜித் ட்வீட்டுக்கு சரத்பவார் பதில்
பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் முடிவுக்கு மாற்றாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவளித்து, அந்த அரசில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சரத் பவார்.
பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ட்வீட்களை அடுத்தடுத்து வெளியிட்ட அஜித் பவார், தாம் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பதாகவும், சரத் பவார் தமது தலைவர்தான் என்றும் தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை அளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரின் முடிவை ஏற்காமல் இருக்கும் நிலையில், இந்த ட்வீட் தேசிய வாத காங்கிரஸ் முழுமையும் இந்த கூட்டணியை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை தர முயன்றது.
இதையடுத்து அஜித் பவாரின் ட்வீட்டுக்கு பதில் அளித்து சரத் பவார் ட்விட்டரிலேயே ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், "பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.சிவசேனாவுடனும், காங்கிரசுடனும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது. அஜித் பவாரின் அறிக்கை பொய்யானது, தகவறான தகவல் அளிப்பது. குழப்பம் விளைவித்து மக்கள் மத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்துவது" என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைத்தது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தங்களுக்கு உள்ள ஆதரவைத் தெரிவித்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த கடிதம் மற்றும், பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அளித்த கடிதம் ஆகியவற்றை திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கும்படி மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்