You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவுகிறது.
மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த 'பெரியார்' திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது.
திரையிடலுக்கு முன்பாக, 'பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக விமர்சித்துள்ளார் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடிய அவரை மலேசியாவில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து எதிர்ப்பாளர்கள் தரப்பு மலேசிய உள்துறை அமைச்சின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதாகவும், அதையடுத்து கி.வீரமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, என்ன காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது, எந்தத் தரப்பு இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது, என்பது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பிபிசி தமிழ் விவரம் கேட்டது.
மலேசிய - இந்திய பாரம்பரியக் குழுவின் தலைவரான பிரபாகரன் நாயர் கூறுகையில், நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே சிலர் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார்.
எனவே, வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீரமணியை அழைத்தது ஏன்?
"எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யாரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டது என் கவனத்துக்கும் வந்தது."
"இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பல்வேறு வகையில் நீண்ட கால தொடர்புகள் உள்ளன. இது தொடர்பான ஏராளமான வரலாற்றுப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அத்தகைய தகவல்களைப் பெற வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்கிறார் பிரபாகரன் நாயர்.
"அதனால் தந்தை பெரியாரின் மலேசியப் பயணமும், அதனூடே மலேசிய வாழ் இந்தியர்களிடம் ஏற்பட்ட தாக்கமும் குறித்து உரையாற்றவே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழைத்திருந்தோம்." என்கிறார் அவர்.
"இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு தொடர்பில் வரலாற்றுப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம். அதனால்தான் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கி.வீரமணி மலேசியா வருவதை அறிந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்."
"தவிர, கி.வீரமணி குடும்பத்தாருக்கும் மலேசியாவுக்கும் நல்ல தொடர்புகள் உண்டு. எனவே தந்தை பெரியாரின் வருகை குறித்து அவர் கூடுதல் தகவல்களை அறிந்திருப்பார். எங்களது நிகழ்ச்சிக்கும் மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால், சிலர் எங்களுடைய நோக்கத்தை அறியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் கேட்கவே இல்லை," என்று பிரபாகரன் நாயர் தெரிவித்தார்.
'முன்பு பெரியார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே இப்போதும் எதிர்க்கிறார்கள்'
இதற்கிடையே பிபிசி தமிழிடம் பேசிய மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலர் கே.ஆர்.ஆர்.அன்பழகன், கி.வீரமணி உரையாற்ற எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமல்ல என்றார்.
"கி.வீரமணி என்ன தலைப்பில் பேசப் போகிறார், எது குறித்துப் பேசப் போகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பலமுறை மலேசியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி உள்ளார்."
"இந்நிலையில் திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. தந்தை பெரியார் குறித்து பலர் ஆய்வுகள் மேற்கொண்டு நூல்களும் படைத்துள்ளனர். எனவே யாரும் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையும் கருத்துக்களையும்தான் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். 'பெரியார்' திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு திரையிட்ட போதும் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதும் அதே தரப்பினர்தான் எதிர்க்கிறார்கள்," என்றார் அன்பழகன்.
'வீரமணியின் மலேசிய வருகையே நாட்டின் கொள்கைக்கு எதிரானது'
இந்நிலையில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, திராவிடர் கழகம் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றார்.
இறை நம்பிக்கை என்பது மலேசியாவின் கொள்கை என்றும், மலேசியர்கள் அனைவருக்கும் இறை நம்பிக்கை உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், இறை நம்பிக்கை இல்லாத ஒருவர் மலேசியாவுக்கு வருவதே நாட்டின் கொள்கைக்கு எதிரானதுதான் என்றார்.
"திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்துப் பேசும். மற்ற மதங்களைக் குறித்துப் பேசாது. ஒருவரை உரையாற்ற அழைக்கும்போது அவரதுபின்னணி குறித்து ஆராய வேண்டும்."
"எனவேதான் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு எங்கள் மாமன்றம் புகார் கடிதமும் அனுப்பியது. எங்கள் மாமன்றம் மட்டுமல்லாமல் மேலும் சில இந்து அமைப்புகளும் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன," என்றார் ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்