You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி தீர்ப்பு: ராமருக்கு வெற்றி தேடித் தந்த "கடவுளின் நண்பர்"
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பழைய கட்டடங்களில் அமைந்துள்ள நீதிமன்ற அறைகளில் அமர்ந்திருக்கிறார். நாட்டின் மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான வழக்கில் இந்துக் கடவுள் ராமருக்காக இவர் வாதாடியுள்ளார்.
குழந்தை ராமரின் ''அடுத்த நண்பர்'' என்று நீதிமன்ற ஆவணங்களில் திரிலோகி நாத் பாண்டே பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக நீண்ட காலம் நடந்த வழக்கில், கோயில் சிலை தொடர்பான வழக்கும் ஒன்றாக இருந்தது. சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவருக்குச் சாதகமாக வந்துள்ளது.
''கடவுள் சார்பாக வழக்காடுவது மரியாதையை பெற்றுத் தரக் கூடியது. பல லட்சம் இந்துக்களில், இந்தப் பணி எனக்கு கிடைத்தது பெருமைக்குரியதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது,'' என்று 75 வயதாகும் பாண்டே சமீபத்தில் பிபிசியிடம் கூறினார்.
பல நூற்றாண்டு காலமாக கோயில் சிலைகள் இந்திய சட்டத்தின் கீழ் ''சட்டபூர்வ அந்தஸ்து கொண்ட நபர்களாகவே'' கருதப்படுகின்றன.
இது ஏன் என்றால், கோயில்களுக்கு பல பக்தர்கள் சிலைகளையும், தங்கள் நிலங்களையும் தானமாக தருகிறார்கள். ஒரு பக்தர் அல்லது வழிபாட்டுத் தலத்தின் மேலாளர் அல்லது ஓர் அறக்கட்டளை இந்த சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். சட்டத்தின் மேலோட்டமான பார்வையில், அந்தச் சிலைகளின் பிரதிநிதியாக இருப்பவர்கள், கடவுளின் ''நண்பர்'' என்று கருதப்படுகிறார்.
ஆனால் கடவுளை நீங்கள் எப்படி வரையறை செய்வீர்கள்? கடவுளின் நன்மைகளுக்காகத்தான் அந்த நபர் செயல்படுகிறார் என்பதை எப்படி உறுதி செய்வது?
இந்தச் சிக்கலான விஷயங்கள் சட்டபூர்வமாக ஒருபோதும் வரையறை செய்யப்படவில்லை. அந்தந்த நிகழ்வுகளின் அடிப்படையிலும் அந்தந்த வழக்குகளின் அடிப்படையிலும் அது முடிவு செய்யப்படுகிறது.
கடவுளின் ''சிறந்த நண்பர்'' என்று இன்னொருவர் உரிமை கோராத வரையில், சர்ச்சை எதுவும் கிடையாது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கடவுள் ஒரு நண்பரை மட்டும் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.
அயோத்தியில் இருந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இந்து கும்பல் ஒன்று 1992-ல் இடித்துத் தள்ளியதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
தாங்கள் கடவுளாக வழிபடும் ராமர் பிறந்த அதே இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக இந்துக்கள் பலர் நம்பினர். அங்கே கோயில் கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களுடைய விருப்பங்களை உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை ஏற்றுக் கொண்டு, மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு வேறொரு இடம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடவுளுக்காக வாதாடியுள்ளார் பாண்டே. பல லட்சம் இந்துக்கள் அவருடைய நீதி உணர்வையும், பரந்த நல்லெண்ணத்தையும் உடையவர் என்று கூறிப் பாராட்டுகின்றனர். அதே போல ராமாயணத்தின் கதாநாயகரான ராமர், தியாகம் மற்றும் வீரத்தின் அடையாளமாக ஏராளமான இந்துக்களால் போற்றப்படுகிறார்.
ராமர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள், பல இந்து அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டவை. அந்த மனுக்களை இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் மிகுந்த கவனத்துடன் எழுதியிருக்கிறார்கள். அவை அனைத்தும், வழிபாடு, தெய்வீகத்தன்மை, அவதாரங்கள், தெய்வீக உணர்வு பற்றிப் பேசுவதாக உள்ளன.
அது தாம் பிறந்த இடம் என்பதால், அயோத்தியில் உள்ள அந்த நிலம் தமக்குரியது என்று பாண்டே மூலமாக ராமர் உரிமை கோரினார்.
சனிக்கிழமையன்று தீர்ப்பளித்த நீதிபதிகளும், மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாக ''இந்துக்கள் நம்பினார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
1989ஆம் ஆண்டு ராமர் கோயில் தொடர்பான வழக்கில் தம்மையும் மனுதாரராக சேர்த்துக் கொண்ட பாண்டே, ராமரின் மூன்றாவது நண்பர் ஆவார். அதற்கு முன்பாக உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஓய்வுபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரும் இதே போன்று ராமரின் நண்பர் எனக்கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
சட்ட உதவி
உத்தரப் பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பாண்டே. நான்கு குழந்தைகளில் மூத்தவரான இவர், உள்ளூரில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். இந்தி படித்த அவர் பின்னாளில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆனால் அந்த வேலையில் அவர் நீடிக்கவில்லை.
பள்ளிப் பருவத்திலேயே அவர், ஆளும் பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் அவர், பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல்பாடுகள் கொண்ட துணை அமைப்பு'' என்று அரசியல் நிபுணர் மஞ்சரி கட்ஜு கூறுகிறார்.
வி.எச்.பி.யில் அவர் இருந்த காலத்தில் ''இந்துக்களிடையே உணர்வு நிலையை தூண்டுவதற்காக'' உத்தரப்பிரதேசம் முழுக்க பயணம் செய்துள்ளார்.
''பெருமளவில் இந்துக்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வதாக தகவல் வரும் பகுதிகளுக்கு நான் சென்று, அதைத் தடுக்க முயற்சிப்பேன். இந்து சமூகத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்று நான் நம்பினேன். இந்துக்களின் பெருமையை உயர்த்துவதற்கு, தற்காப்பு நிலையில் இருப்பதைவிட, எதிர்ப்பு நிலையில் செயல்பட வேண்டிய அவசியம் இருந்தது,'' என்று பாண்டே தெரிவித்தார்.
நல்ல நினைவாற்றல்
பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது, அதில் பங்கேற்றதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான 49 நபர்களுக்கு சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகளில் பாண்டே ஈடுபட்டார். மசூதி இடிப்பு தொடர்பான தனிப்பட்ட விசாரணைகளின் போது நிறைய இந்து துறவிகள் தங்களை காத்துக் கொள்ள இவர் உதவியுள்ளார். (இதில் ஒரு விசாரணை முடிய 17 ஆண்டுகள் ஆனது. இது தொடர்பான கிரிமினல் வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.)
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து 40 நாட்கள் இறுதிக்கட்ட விசாரணைகள் நடந்தபோது, மூட்டு வலி பிரச்சனையில் அவதிப்பட்ட பாண்டே, ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். ''கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நீதிமன்ற அறைகளுக்கு நூற்றுக்கணக்கான முறை சென்றிருப்பேன். அங்கு நான் அதிகம் பேசியதில்லை. என் சார்பாக வழக்கறிஞர்கள் பேசினார்கள். நினைவில் கொள்ளுங்கள், நான் கடவுளின் அடையாளம்,'' என்று அவர் கூறினார். இறைவனின் சார்பாக ஆவணங்களில் அவர் கையெழுத்திடுவார்.
அயோத்தியில் பரந்து விரிந்து கிடக்கும் வி.எச்.பி. வளாகத்தில் ஓர் அறையில் பாண்டே தங்கியிருக்கிறார். மசூதி இடிக்கப்பட்டதில் இருந்து, கோயில் கட்டுவதற்காகப் போராட்டம் மேற்கொண்டு காத்திருக்கும் அந்த அமைப்பினர் தங்கியுள்ள பகுதி அது. தீர்ப்பு வெளியான நிலையில், கடவுளின் ''நண்பர்'' என்ற நிலையை இழந்துவிட்டார் பாண்டே. ஆனால் அதுபற்றி அவர் கவலைப்படவில்லை.
''நான் எப்போதும் கடவுள் ராமருடன் இருக்கிறேன். நான் அவருடன் இருக்கும்போது, யாருக்கு பயப்பட வேண்டும்? கடவுளின் நிலைப்பாடு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் பாண்டே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்