அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?

தீர்ப்பை கேட்டதும் காவி உடை அணிந்தவர்கள் மட்டுமல்லாது, உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நூற்றுக் கணக்கான வழக்குரைஞர்களும் `ஜெய் ஸ்ரீ ராம் ` என முழக்கமிட்டனர்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த அயோத்தி நிலத் தகராறு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வழங்கப்படும் என நேற்றிரவு அறிவிப்பு வெளியானதும், சர்ச்சைக்குரிய பகுதியான அயோத்தி மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற பகுதியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தை சுற்றியுள்ள வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, அங்கு வரும் வாகனங்கள், ஊடகத்தினர் ஆகியோர் கடும் சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்த செய்திகளை வழங்குவதற்காக, உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் காலை முதலே ஊடகங்கள் குவிந்திருந்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது வீட்டிலிருந்து கிளம்பியது முதல், ஒவ்வொரு நிமிடங்களும் செய்திகளாகப்பட்டன. சரியாக 10.36 மணியளவில் உச்சநீதிமன்றத்தை வந்தடைந்த தலைமை நீதிபதி, தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

உச்ச நீதிமன்றம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், ஊடகங்கள் கூடியிருந்த வளாகத்தில் காவி உடையணிந்திருந்த சாதுக்கள் மற்றும் இந்துத்துவா ஆதரவாளர்களை பார்க்க முடிந்தது. அவர்கள் ஒவ்வொரு ஊடகங்களாக சென்று பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர்.

இது மட்டுமல்லாமல் வெறும் செல்ஃபி எடுப்பதற்காக மட்டும் உள்ளே வந்திருந்த பொதுமக்கள் சிலரும் அங்கிருந்தனர். ஆனால் இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள், அடையாள அட்டை சரிபார்ப்புகளை மீறி அவர்கள் எப்படி உள்ளே வந்தனர் என்பதை அறிய முடியவில்லை.

காலை 11 மணியளவில் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை ரஞ்சன் கோகோய் வாசிக்கத் தொடங்கினார். சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பை கேட்டதும், வளாகத்தில் இருந்த இந்துத்துவா ஆதரவாளர்களும், காவி உடையணிந்த சாதுக்களும் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷங்கள் எழுப்ப தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்களும் அவர்களுடன் இணைந்து `ஜெய் ஸ்ரீ ராம்` என கோஷம் எழுப்பிக்கொண்டே, சக வழக்கறிஞர்களிடம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இவர்களுடன் ஊடகங்களைச் சேர்ந்த சிலரும் இதே கோஷத்தை எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அவர்கள் எந்த வகையான ஊடகத்தினர், எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களும், ஊடகங்களின் நேரலை பேட்டிகளும் என அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே பரபரப்பானது. இதற்கிடையே சில இஸ்லாமியர்கள் அங்கு வர, அவர்களை நோக்கி ஊடகங்களின் கேமிராக்கள் திரும்பின. காவி உடை அணிந்திருந்த நபரோடு, அந்த இஸ்லாமியர் கை குலுக்குவது போன்ற காட்சியை படம் பிடிக்க ஊடகங்கள் போட்டி போட்டன. ஆனால் அந்த இஸ்லாமியர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள பெரும்பாலான ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :