You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலினுக்கு சவால் விடுக்கும் பாஜக - "நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?"
இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சித்தான் திமுக என்றும் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக சாடியுள்ளார்.
அண்மையில், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிந்து வந்தனர்.
அதேசமயம், திருவள்ளுவரையும், திருக்குறளையும் இந்து மதத்தோடு தொடர்புப்படுத்தி பாஜக ஆதரவாளர்கள் கருத்து பதிந்தனர்.
இந்த சூழலில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக சாடி கருத்து தெரிவித்திருந்தார்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!" என்று பாஜகவை தாக்கி இருந்தார்.
ஸ்டாலின் இந்த கருத்துக்குத்தான் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
"நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?"
திருவள்ளுவர் ஒரு புனிதர் அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல என்று கூறிய முரளிதர் ராவ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பொருந்தும் வாழ்வியல் நெறியோடு வாழ்ந்தவர் என்றும், அவரை குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முயல்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு திமுக எப்போதும் துரோகம் இழைத்துள்ளது என்று சாடிய அவர், நெற்றியில் திருநீறு வைப்பவர்களை தமிழர்கள் அல்லாதவர் என்று ஸ்டாலினால் வெளிப்படையாக சொல்ல முடியுமா சவால் விடுத்தார்.
"அப்படி ஒருவேளை அவர் சொன்னால் தமிழர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்," என்று முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
திமுகவின் எதிர்வினை என்ன?
முரளிதர் ராவ்வின் கருத்துக்கு இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்த பதிலடியும் தரப்படவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளுவருக்கு பதிலாக பெரியார் என்று கூறியது சமூக ஊடங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: