திருவள்ளுவர் படத்தில் காவி உடை: பாஜக பதிவுக்கு எதிராக இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்

தமிழக பாஜகவின் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துக்கு இணையத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இடப்படும் பதிவுகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

ட்விட்டர் பயனர்கள் பலர் இந்த ஹேஷ்டேக்கை இட்டு பாஜக-வை சாடி வருகின்றனர்.

சென்னை டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளர்.

ஏன் இந்த திடீர் டிரெண்ட்?

நேற்று (சனிக்கிழமை) தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், கற்றதனால் ஆய பயனென்கொல் என்று தொடங்கும் குறளை பதிந்து, அதற்கான விளக்கத்தையும் கூறி, அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று கூறி ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

கூடவே, திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அந்த படம்தான் தற்போது பிரச்சனை.

பாஜக பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டுள்ளது. இதுதான் சமூக ஊடகத்தில் எழுந்த கடும் விமர்சனத்துக்குக் காரணமாகியுள்ளது.

ட்விட்டர் பயனர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிரதாப் ஜெகநாதன் என்ற நேயர், காந்திக்கும், அம்பேத்கருக்கும் காவி உடை அளித்ததாகக் குறிப்பிட்டு. இப்போது திருவள்ளுவருக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதத்துக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான திருக்குறளை பாதுகாத்திட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரி அருண்பிரசாத். மேலும், "திருக்குறளின் மகத்துவத்தை இந்த உலகம் உணரும். அதற்கு காவி சாயம் பூசி அதன் மதிப்பை கெடுக்க வேண்டாம்," என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் பயனர்கள் சிலர் தங்கள் முகப்பு படத்தில் காவி உடை, பட்டை இல்லாத திருவள்ளுவர் படத்தை வைக்கின்றனர்.

பாஜக ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராம்பிரசாத் என்ற நேயர், "தமிழ் தமிழ் என்று கூறி, தமிழை வளர்த்தேன் என்று பொய்யுரைத்து ஊரை உலகை ஏமாற்றிய திராவிடம் வீழும் நாள் வெகு அருகில். திராவிடம் தமிழையும் தமிழர்களையும் கெடுத்ததே தவிர ஒன்றுமே கொடுக்கவில்லை. தமிழை உலகெங்கும் எடுத்து சென்று பன்மடங்கு தமிழ்த் தொண்டு செய்துள்ளார் நம் நரேந்திர மோதி," என்கிறார்.

செளதியுடன் Modi நெருக்கமாக இருக்க Petrol மட்டுமே காரணமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :