காற்று மாசு: “சென்னை மையத்தில் மாசுபாட்டை கண்காணிக்கும் வசதி இல்லை”

காற்று மாசு தொடர்பான தமிழ்நாடு வெதர்மேனின் கருத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக மூச்சு திணறுகிறது டெல்லி. ஒவ்வொரு டெல்லி வாசியும் சுவாசிக்கத் திணறுகிறார். அந்தளவுக்குக் காற்றெங்கும் பரவி இருக்கிறது மாசு.

இது ஏதோ டெல்லியின் பிரச்சனை மட்டுமல்ல, நாளை இதே நிலை சென்னைக்கும் வரலாம் என ஓர் எச்சரிக்கை எழுந்துள்ளது. அதுவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்பிடமிருந்து.

அவர் பகிர்ந்துள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில், "டெல்லியின் காற்று மாசு சென்னையையும் பாதிக்கலாம். இதுநாள் வரை சென்னையில் காற்று மாசு இல்லை. இதற்கு முக்கிய காரணம் சென்னையில் உள்ள கடற் பகுதி. அதுமட்டுமல்ல வடகிழக்கு பருவமழை காற்று மாசு ஏற்படாமல் சென்னையைக் காக்கும். ஆனால், இம்முறை மழை தடைப்பட்டுள்ள சமயத்தில் இந்த காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், சென்னையையும் இது பாதிக்க வாய்ப்புள்ளது. காற்றின் தரம் 200 - 300 வரை உயர வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், வெதர்மேன் கருத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது.

மாசுபாட்டை கண்காணிக்கும் வசதி இல்லை

"நம் வெப்பநிலை 26 டிகிரியாக உள்ளது. சென்னையில் வாகன புகை மற்றும் குப்பை எரிப்பதால் ஏற்படும் புகை ஈரக் காற்றால் உரிஞ்சப்படுவதால், அதன் தன்மை மாறிவிடும். வெயில் வரும்போது அந்த புகை மறைந்துவிடும். டெல்லியில் உள்ள மாசுபாட்டுக்கும், இங்குள்ள புகைக்கும் எந்த சம்பந்தம் இல்லை." என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மாசுபாட்டை கண்காணிக்கும் வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

காற்றில் எந்தெந்த மாசு இருக்கிறது, அதன் அளவு என்ன என்பதைக் கணக்கிட்டால், Air Quality Index, அதாவது காற்று மாசின் அளவு தெரியவரும்.

பொதுவாக 50 வரை இருந்தால், நீங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது அதிகமாக, காற்றின் தரம் குறைந்து காணப்படும். அந்த காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில், அது உடலுக்கு கடும் தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

டெல்லியை பொறுத்தவரைக் காற்றின் தரம் சில பகுதிகளில் 500ஐ தொட்டுவிட்டது.

அதுமட்டுமல்லாது, காற்று மாசு அதிகரித்திருப்பது தொடர்பாக, டெல்லி அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மூடப்பட்டு, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தடம் மாற்றப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :