மெக் டொனால்ட் தலைமை செயல் அதிகாரி பணி நீக்கம், பெண் ஊழியருடனான உறவு காரணமா? மற்றும் பிற செய்திகள்

ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி

மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார்.

டெல்லி: மோசமான காற்றுத்தரத்தினால் மக்கள் அவதி; திணறும் தலைநகர்

தலைநகர் டெல்லி, நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் தலைப்புச் செய்தியில் எப்போதும் இடம் பிடிக்கும் டெல்லி, தற்போது கடந்த இரண்டு நாட்களாக காற்று மாசு அதிகரிப்பு என்ற விஷயத்திற்காக மட்டுமே பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், ஒன்றாக இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆனால், இங்கு மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த காற்று மாசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வீடற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியே.

பொதுச் சந்தையில் இறங்கும் அரசின் எண்ணெய் நிறுவனம்

சௌதி அரசின் அரம்கோ நிறுவனம், ரியாத் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்போவதை உறுதி செய்துள்ளது.

தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய வரைபடத்தை நிராகரித்தது பாகிஸ்தான்

நவம்பர் 2ஆம் தேதியன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

புது வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருக்கிறது. மீதமுள்ள 26 மாவட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் இருக்கும்.

இந்த புதிய வரைபடம் தவறானது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் தீர்மானங்களை மீறியது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையை கடந்து சென்று விவசாயம் செய்யும் சீனர்கள்

மக்சிமோவ்க்காவில் உள்ள பண்ணையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் சீன தொழிலாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிக்குச் செல்வதற்கு மட்டுமே அங்கிருந்து வெளியில் செல்கின்றனர். ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தின் மத்தியில் உள்ள கைவிடப்பட்ட பழங்கால கட்டடத்தில் - கதவுக்கு வெளியிலோ உள்ளேயோ பூட்டுகள் எதுவும் இல்லை, 1980கள் மற்றும் 90களைச் சேர்ந்த காகிதங்கள் இறைந்து கிடக்கின்றன.

ஒரு காலத்தில் 400 ரஷ்யர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்த பண்ணையில் இப்போது யாரும் வாழ முடியாத சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கான பதில் இங்கே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :