You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி: மோசமான காற்றுத்தரத்தினால் மக்கள் அவதி; திணறும் தலைநகர்
தலைநகர் டெல்லி. நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் தலைப்புச் செய்தியில் எப்போதும் இடம் பிடிக்கும் டெல்லி, தற்போது கடந்த இரண்டு நாட்களாக காற்று மாசு அதிகரிப்பு என்ற விஷயத்திற்காக மட்டுமே பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், ஒன்றாக இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆனால், இங்கு மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த காற்று மாசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வீடற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியே.
ஏன் இவ்வளவு காற்று மாசு? டெல்லியில் வாழ்பவர்களின் நிலை என்னவாக இருக்கிறது? இதற்கு என்ன தீர்வு என்பதை அலசுகிறது இக்கட்டுரை.
காற்று மாசின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
காற்றில் எந்தெந்த மாசு இருக்கிறது, அதன் அளவு என்ன என்பதை கணக்கிட்டால், Air Quality Index, அதாவது காற்று மாசுவின் அளவு தெரியவரும்.
பொதுவாக 50 வரை இருந்தால், நீங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது அதிகமாக, காற்றின் தரம் குறைந்து காணப்படும். அந்த காற்றை சுவாசிக்கும் பட்சத்தில், அது உடலுக்கு கடும் தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
டெல்லியை பொறுத்தவரை காற்றின் தரம் சில பகுதிகளில் 500ஐ தொட்டுவிட்டது.
அதுமட்டுமல்லாது, காற்று மாசு அதிகரித்திருப்பது தொடர்பாக, டெல்லி அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மூடப்பட்டு, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தடம் மாற்றப்பட்டுள்ளன.
"நமக்கு முன்னே இருப்பதை பார்க்கக்கூட முடியவில்லை. பயமாக இருக்கிறது. எங்கள் குழந்தைகளுக்காகவும், எங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்காகவும், முக்கியமாக எங்கள் உடல்நலம் மற்றும் எதிர்காலம் குறித்து கவலைக் கொண்டுள்ளோம்" என்கிறார் ஜெய்விப்ரா.
புகைமூட்டத்துக்கு என்ன காரணம்?
இந்த சமயத்தில் காற்று மாசு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் அருகில் உள்ள மாநிலங்களில் விவசாய நிலங்களை எரிப்பது. இதனால், கார்பன் டை-ஆக்ஸைட், நைட்ரஜன் டை-ஆக்ஸைட், சல்ஃபர் டை-ஆக்ஸைட் காற்றில் கலக்கும். மேலும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.
அதோடு, வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டுமான வேலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை என அத்தனையும் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கி இருக்கிறது.
என்னதான் தீர்வு?
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு தொடர்பாக ஐஐடி வல்லுநர் சிவ நாகேந்திரனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி தொடர்பு கொண்டு பேசினார்.
"டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனை முறையாக கண்காணித்து, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு செயல்திட்டம் கொண்டுவந்து, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்றார்.
"டெல்லி கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஊர். நகரமயமாக்கல், காற்று மாசை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். டெல்லியில் உள்ள மக்கள் தொகை, வாகனங்களில் இருந்தும் வெளிவரும்புகை, தேவையான மரங்கள் இருக்கிறதா என்று அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் காற்றின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்."
"செயற்கைமுறையில் காற்று சுழற்சியை உருவாக்க முயற்சிக்கலாம். வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு காற்றின் நகர்வு இருக்கும். டெல்லி போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்று நகர்வது கடினமாக இருக்கும். சென்னை, மும்பை போன்ற நகரங்களில் உள்ள ஒரு நல்ல விஷயம் கடல் இருப்பது. கடல் காற்று வீசுவது, காற்று மாசை குறைக்க உதவும். ஆனால், டெல்லியில் இதுபோன்று இல்லை என்பதால், இந்த நடைமுறையில் நாம் ஏதாவது உருவாக்க வேண்டும்."
அதிக மரங்கள் நடப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் சாலைகளில் கொடிகளை உருவாக்கி அவற்றை படற வைக்க வேண்டும் என்றும் இவையெல்லாம் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்த உதவும் என்றும் சிவ நாகேந்திரன் தெரிவித்தார்.
டெல்லி மக்களின் நிலை என்ன?
காற்று மாசை கட்டுப்படுத்தவும், உடனடியான நடவடிக்கை கோரியும் டெல்லி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களில், #DelhiAirPollution #DelhiEmergency போன்ற ஹாஷ்டாகுகளில், தங்கள் நிலையை டெல்லி மக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த காற்று மாசுபாட்டால், தங்களுக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்