You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விலங்குகள் வேட்டை: கரடிகளின் ஆணுறுப்பை அறுத்து தின்றவர் குஜராத்தில் கைது
மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல கரடிகளைக் கொன்று, அவற்றின் ஆண்குறியை சாப்பிட்டதாக கூறப்படும் ஒரு சந்தேகத்திற்குரிய வேட்டைக்கார நபரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யர்லென் எனும் அந்த நபரை பல ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்தனர்.
சமீபத்தில் தேசிய மிருகக் காட்சிசாலை ஒன்றில் கரடி ஒன்று, பாலுறுப்பு அறுக்கப்பட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இந்த செயலை யர்லென்தான் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் மற்ற அதிகாரிகளை எச்சரித்தனர்.
விலங்குகளின் ஆணுறுப்பு பாலுணர்வை தூண்டக்கூடியது என்ற எண்ணத்தை கொண்ட பார்டி-பெஹெலியா எனும் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர் யர்லென் என்று காவல்துறை கூறுகிறது.
கடந்த 19ஆம் தேதி குஜராத்தில் கைது செய்யப்பட்ட யர்லென், மத்திய இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் நடைபெறும் புலிகள் வேட்டையாடலில் முக்கிய நபர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப்பகுதியிலுள்ள மாநிலங்களில் அழியும் நிலையிலுள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழங்குகள் யர்லென் மீது நிலுவையில் உள்ளன.
காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக தனது அடையாளத்தை பல்வேறு விதமாக யர்லென் மாற்றியதாக கூறப்படுகிறது.
"யர்லெனை கண்டறிந்து, கைது செய்யும் பணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக தனிப்படை செயல்பட்டு வந்தது" என்று கூறுகிறார் வனத்துறையின் சிறப்பு பணிக்குழுவின் தலைவரான சிரோதியா.
மத்தியப்பிரதேசத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் பார்டி-பெஹெலியா என்றும் நாடோடி இனக்குழுவின் காலங்காலமாக காடுகளில் வாழ்ந்து, காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றை உணவாக உட்கொள்வதை பழக்கமாக கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
மத்தியப்பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசிய பூங்காவில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு கரடிகள் அவற்றின் ஆணுப்புறுப்பு மற்றும் பித்தப்பை வெட்டி எடுக்கப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்ட சம்பவத்தில் யர்லென் கைது செய்யப்பட்டார்.
ஓராண்டு சிறையில் கழித்த அவர், பிறகு பிணையில் விடுக்கப்பட்ட பின்பு அதே செயலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினரின் ஆறாண்டுகளாக தீவிர வேட்டைக்கு பின்னர் தற்போது யர்லென் சிக்கியுள்ளார்.
கரடிகளின் பித்தப்பை சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின் மிக முக்கியமான அங்கமாக உள்ளதால் அதற்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தை உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்