தாய்லாந்து மன்னரின் துணைவி பதவி பறிப்புக்கு பின்னும் தொடரும் அதிரடி மற்றும் பிற செய்திகள்

மிகவும் மோசமான நடந்து கொண்டதாக ஆறு அதிகாரிகளை தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன் பதவி நீக்கியுள்ளார்.

மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, மன்னரின் துணைவியாக இருந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கின் அரச அதிகாரத்தை பறித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஒரு பெண், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி மற்றும் இரண்டு அரச மெய்காப்பாளர்கள் இந்த ஆறு பேரில் அடங்குகின்றனர்.

தங்களின் நலன்களுக்காக அல்லது பிறரின் ஆதாயத்திற்காக தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி கொண்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கின் அரச அதிகாரத்தை பறித்து வஜ்ரலாங்கோர்ன் உத்தரவிட்டிருந்தார்.

காஷ்மீர் பற்றிய மலேசிய பிரதமர் மகாதீரின் கருத்து: இந்திய - மலேசிய உறவில் விரிசல் பெரிதாகுமா?

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐநா தீர்மானத்தைப் பின்பற்றி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து இந்தியா, மலேசியா உறவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறு விரிசல் பெரிதாகுமா? அல்லது இந்தியா தொடர்ந்து மௌனம் காக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திரா அரசு மது விற்பனை: தமிழகத்தைப் போல செய்யப்படும் முயற்சி பலன் அளிக்குமா?

அது 2017 டிசம்பர். ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நிடமாரூ கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான வரலட்சுமியும், 27 பெண்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற மதுக் கடைகள் மற்றும் மது அருந்தும் அறைகள் இருக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை. அதன் பிறகு அவர்கள் அந்தக் கிராமத்தில் இருந்த மீன்பிடி குளத்தில் குதித்துவிட்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர் என்றாலும், இன்றைக்கு அந்தக் கிராமத்துக்கு அருகில் ஒரு மதுக் கடையும் கிடையாது.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது புகார்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரம ரத்னவினால் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இங்கிலாந்து: கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்ப கட்டடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிருடன் யாரேனும் மீட்கப்பட்டுள்ளனரா என்று இது வரை காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :