You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப. சிதம்பரம் கைதின் நோக்கம் என்ன?- மூத்த வழக்கறிஞர்கள் அலசல்
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார். சிபிஐ-யை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை அக்டோபர் 16ஆம் தேதி கைது செய்தது. அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக அவர் திகார் சிறையில் இருந்து அதிகாரிகளால் இன்று (வியாழக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்தது. தற்போது இதே வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டில் இவரை விசாரிக்க காவலில் எடுத்துள்ளது அமலாக்கத்துறை.
இது தொடர்பாக சில சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்டது பிபிசி தமிழ்.
'சிதம்பரத்திற்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதல்ல குறிக்கோள்'
"ஒரு தவறு செய்திருக்கிறார் என்று கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது முக்கிய குறிக்கோள் சிதம்பரத்தை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, அவரை விசாரணை கைதியாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள்" என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.
அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் முன்னதாக கைது செய்திருக்கிறார்கள், ஆனால், அவருக்கு உடனடியாக ஜாமின் கிடைத்துவிட்டது. ஆனால் சிதம்பரத்தை ஜாமினில் வெளியே விடவில்லை. சொல்லப்போனால் சிதம்பரத்தின் பெயரே முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்கிறார் அவர்.
"தற்போது ஆட்சி செய்பவர்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நீதித்துறையும் வலிமையாக இல்லை. நீதித்துறை சரியாக இருந்தால், இதுபோன்று நடக்காது."
ப.சிதம்பரம் தப்பித்து போகப் போகிறாரா என்று கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர் விஜயன், "அவர் தடயங்களை அழித்துவிடுவார் என்று கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு கொலை செய்தால், கத்தியை மறைத்து வைக்கலாம், அல்லது யாரையாவது மிரட்டலாம். இங்கு அப்படி ஏதும் செய்ய சாத்தியமில்லை. ஆவணங்களைக் கொண்டுதான் சிதம்பரத்தை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும். அதனை சிதம்பரம்தான் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆவணங்களை கண்டுபித்து நிரூபிக்க வேண்டியது சிபிஐ-யின் கடமை" என்றார்.
"உதாரணமாக, நான் பணம் திருடியிருக்கிறேன் என்று கைது செய்கிறார்கள். நான் பணம் திருடினேன் என்பதை நிரூபிக்க வேண்டியது கைது செய்தவர்களின் கடமையே தவிர குற்றவாளியின் கடமை இல்லை" என்று விஜயன் தெரிவித்தார்.
இத்தனை நாட்களுக்கு பிறகு, ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை புதன்கிழமை கைது செய்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் ஒருவரை 60 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருக்க முடியாது. 60 நாட்களுக்கு மேலானால், தானாகவே ஜாமினில் அவர் வெளிவந்துவிடலாம். நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் அளித்துவிடும். சிபிஐ கைது செய்து தற்போது 60 நாட்கள் முடியவுள்ள நிலையில், அவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை கைது செய்திருப்பதாக தெரிவித்தார்.
'சிதம்பரத்தை கைது செய்தது பா.ஜ.க அரசு அல்ல'
ஒரு குற்றவாளியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றால், அவரை கைது செய்யக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை என்கிறார் வழக்கறிஞர் குமரகுரு.
இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்திற்கு பிறகுதான் இந்த வழக்கில் சிதம்பரம் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால், முதல் தகவல் அறிக்கை அதற்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
"வாக்குமூலத்தை வைத்து மட்டுமே ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள் என்று பலரும் அதை ஒரு குற்றம் போல சொல்கிறார்கள். கொலைக் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை விசாரிக்கும்போது, நான் மற்றொருவருடன் சேர்ந்துதான் இந்தக் கொலையை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்தால், அவரையும் கைது செய்ய வேண்டும் தானே என்று கேள்வி எழுப்புகிறார் குமரகுரு.
மேலும், ப.சிதம்பரத்தை கைது செய்து சிறையில் வைத்தது பாஜக அல்ல. அனைத்தும் இங்கு சட்டப்படி நடக்கிறது. முறையான நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குமரகுரு கூறினார்.
ப.சிதம்பரம் தரப்பினர் ஜாமின் மனுவை தாக்கல் செய்யும் சரியான நடைமுறையை பின்பற்றவில்லை என்றும் அதனால்தான் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இவ்வளவு நாட்கள் கழித்து தற்போது அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த குமரகுரு, "ஊழல் வழக்கு என்பது வேறு, பணம் கையாடல் என்ற வழக்கு வேறு. அமலாக்கத்துறை வழக்கு என்பது போலீஸ் புகார் மாதிரி அல்ல. ஊழல் குற்றச்சாட்டில் ஒருவரை உடனடியாக கைது செய்ய முடியும். ஆனால், அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்வதற்கு, முறையான நீதிமன்ற உத்தரவு வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவை பெற்றுதான், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது" என்றார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தண்டனை கிடைக்க 99% வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்