You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய சட்டத்துறை செயலாளராக டெல்லி மாவட்ட நீதிபதி மெந்திரட்டா நியமனம்: பின்னணி என்ன?
- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய சட்டத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக, பணியில் இருக்கும் மாவட்ட நீதிபதி ஒருவர் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனூப் குமார் மெந்திரட்டா என்ற அந்த நீதிபதி, டெல்லி நீதித்துறை சேவை பணியில் இருப்பவர்.
புதிய நியமனம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர் பதவி நியமனங்களுக்கான அமைச்சரவை கூடி, ஒப்பந்த அடிப்படையில் அனூப் குமார் மெந்திரட்டாவை இந்திய சட்ட விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதில், பதவியேற்கும் நாளில் இருந்து 30.03.2023 வரை அல்லது 60 வயது அடையும்வரையோ மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையோ இந்திய சட்டத்துறை செயலாளராக மெந்திரட்டா நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, சட்டத்துறை செயலாளர் பதவிக்கு இந்திய சட்டப்பணிகள் சேவையில் உள்ள மூத்த அதிகாரி நியமிக்கப்படுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவர், மத்திய அரசின் சட்டத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அரசு வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நியமனமாக கருதப்படுகிறது.
பின்னணி என்ன?
டெல்லியில் சாகேத் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக கடந்த மே மாதம்வரை பணியாற்றிய மெந்திரட்டா அதன் பிறகு கட்கர்டூமா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.
இந்த இரு பொறுப்புகளுக்கு முன்பாக, அவரது சட்ட அனுபவத்தை பெறும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை, மெந்திரட்டாவை டெல்லி அரசுப் பணிக்கு 2017-ஆம் ஆண்டு வரவழைத்துக் கொண்டு, டெல்லி சட்டத்துறை முதன்மைச் செயலாளராக நியமித்தது.
கனையா குமார் விவகாரம்
இவரது பதவிக்காலத்தில்தான் ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களான கனையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில், தேசவிரோத வழக்கை தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் டெல்லி துணை நிலை ஆளுநருக்கே உண்டு என்று மெந்திரட்டா டெல்லி அரசிடம் கூறினார். ஆனால், தங்களின் கருத்தை பெறாமல், நேரடியாக கனையா குமார் மீது எவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று மெந்திரட்டாவிடம் விளக்கம் கேட்டு டெல்லி சட்ட அமைச்சர் கெய்லாஷ் கெலோட் நோட்டீஸ் அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து கனையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி காவல்துறை தாக்கல் செய்த 1,200 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், கனையா குமார் மீதான வழக்கை கடந்த மாதம் விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த டெல்லி காவல்துறை, தேசவிரோத குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான அனுமதி இன்னும் உள்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை என்று கூறியது.
இதையடுத்து வழக்கை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதற்குள்ளாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும், முறையான அனுமதியின்றி வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கூறியது.
கடந்த 2016 பிப்ரவரி 9-ஆம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது, ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்த கனையா குமார் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பிதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடந்த ஜனவரி 14-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்துறை செயலாளர் பதவி விலகல்
இதற்கிடையே, இந்திய சட்டத்துறை செயலாளராக இருந்த சுரேஷ் சந்திராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அது நடக்காததால் தமது பதவியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் விலகினார்.
இதையடுத்து நீதித்துறை செயலாளர் அலோக் ஸ்ரீவாஸ்தவா வசம் சட்டத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய சட்டத்துறை செயலாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் இந்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதில், பணியில் உள்ள நீதிபதி, அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பணிகள் என்ன?
இந்தப் பின்னணியில்தான் டெல்லி அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி நீதித்துறை சேவை பணியில் மீண்டும் சேர்ந்த மெந்திரட்டாவை, இந்திய சட்டத்துறை செயலாளர் பதவிக்கு இந்திய அரசு தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, இந்த பதவிக்கு சுமார் 60 பேர் விண்ணப்பித்தார்கள். அதில், இந்திய சட்டத்துறை கூடுதல் செயலாளர்கள் எஸ்.ஆர். மிஸ்ரா, ரீடா வஷிஸ்த், கே. பிஸ்வால், ஓய்வு பெற்ற இந்திய ரயில்வே சேவை அதிகாரி ஏ.கே. குலாட்டி, மாவட்ட முதன்மை நீதிபதி அனூப் குமார் மெந்திரட்டா, இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக கூடுதல் செலயாளர் சஞ்சய் சிங் ஆகியோர் பதவிக்கான நேர்காணலுக்காக தகுதி பெற்றார்கள். அதில், மெந்திரட்டா, குலாட்டி, சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் அழைக்கப்பட்டு, இந்திய அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையிலான தேர்வுக்குழுவால் நேர்காணல் செய்யப்பட்டனர்.
இந்திய சட்டத்துறை செயலாளர் என்ற முறையில், அமைச்சகங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது, இந்திய அரசு சார்பில் முக்கிய வழக்குகளில் அரசுக்காக ஆஜராவது, இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்), சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) ஆகியோரின் கருத்துகளை கேட்டுப்பெறுவது அல்லது ஆலோசிப்பது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்குகளை கையாள்வதற்கான நிதி மற்றும் பிற வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மெந்திரட்டா மேற்கொள்வார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே அதிகாரம் செலுத்துவது தொடர்பாக நிலவும் போட்டியில், இந்திய அரசுக்கு சாதகமான நிலையை மெந்திரட்டா எடுத்ததாக கனையா குமார் வழக்கு சர்ச்சையின்போது பேசப்பட்டது. இந்தப் பின்னணியில் அவரது சேவையை இந்திய அரசு பெற விரும்புவதன் மூலம், அவரது சட்டத்துறை செயலாளர் பணியின் நடவடிக்கைகள் இந்திய அரசு வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்