You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலகோட் தாக்குதல்: "நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு" - இந்திய விமானப்படை தளபதி
பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தின் மூலமே அதற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா, "அது ஒரு மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள்கிறோம்; இது வரும் காலங்களில் மீண்டும் நடக்காது " என்று தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை ராணுவ தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய விமானப்படை தளபதி, "நமது ஏவுகணையே, ஹெலிகாப்டரை தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
பிப்ரவரி 14 அன்று இந்திய ஆளுகையின்கீழ் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய படை வீரர்கள் 40க்கும் மேலானவர்கள் பலியானார்கள்.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது, பிப்ரவரி 26 அன்று தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.
புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அப்போது தெரிவித்தது.
"மூன்று இடங்களில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. ஆனால், அவை விரட்டியடிக்கப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள். நாங்கள் ஜனநாயக நாடு. நீங்கள் ஜனநாயக நாடு அல்ல என்று நிரூபித்துள்ளீர்கள்" என்று அப்போது இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு மக்கள் தொடர்பு பிரிவின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.
பாலகோட் எங்கிருக்கிறது?
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது
2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின. இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி - ஷி ஜின்-பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் நடப்பதற்கு காரணம் என்ன?
- தனித் தமிழ் டீக்கடை: "உங்களுக்கு 'வன் தேனீர்' வேண்டுமா? மென் தேனீர் வேண்டுமா?"
- பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியதற்காக மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு
- காந்தியின் 150வது பிறந்தநாளில் திருடப்பட்ட அவரது அஸ்தி - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்