வன்கொடுமை தடுப்பு சட்டம்: தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யக்கூடாது என்ற தமது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது செய்யக் கூடாது என்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி இந்த தீர்ப்பை வழங்கி இருந்தது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின் சில அம்சங்களை திரும்ப பெறுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

"பட்டியலின மக்கள் இன்னும் தீண்டாமையை எதிர்கொள்கிறார்கள். சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சம உரிமைக்கான அவர்களின் போராட்டம் இன்னும் ஓய்ந்தப்பாடில்லை" என்றும் நீதிபதிகள் கூறினர்.

நாடாளுமன்றத்தால் என்ன செய்ய முடியாதோ அதனை நீதிமன்றத்தாலும் செய்ய முடியாது என்று இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் உடனடி கைது நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் புகாரின் அடிப்படையில் ஜாமின் வழங்குவது இருக்க வேண்டும் என்றும் தற்போது உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :