ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு மனு: "வெளிநாட்டுக்கு பணம் கொண்டுபோன வழக்கு இல்லை இது"

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிபிஐ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்து ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மக்கள்பணம் ஏதும் சம்பந்தப்படவில்லை; மேலும் இது வங்கி மோசடி வழக்கோ அல்லது பணத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்வது தொடர்பான வழக்கோ அல்ல இது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது சொந்த நலனுக்காக நிதி அமைச்சர் பதவியை பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் இந்த மனுவில் மறுத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த வழக்கை மோசமான பொருளாதாரக் குற்றம் தொடர்பானது என வருணித்திருந்தது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

"இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க முடியாது. குறிப்பாக பொருளாதார குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதி பானுமதி தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையின் ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கின் பின்னணி

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து அவர் சிபிஐ காவலில் இருந்து வருகிறார்.

சிபிஐ நீதிமன்றம் அவரது காவலை இரண்டு முறை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு திரும்பிப் பெறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :