ஹரியாணா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த தேர்தல் ஆணையம்

ஹரியாணா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்யப்பட்டவற்றை பரப்புரையின்போது பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் 21 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் இந்த மாநிலங்களில், அக்டோபர் 24 அன்று முடிவுகள் வெளியாகும். இத்துடன் பிற மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்களும் நடக்கவுள்ளன.

இன்று தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு, அரசியல் கட்சிகளின் கூட்டங்களின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேனர்கள், போஸ்டர்கள் போன்றவற்றை தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்த வேண்டாம் சென்ற பிப்ரவரி 26 அன்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும், கட்சிகள் பிலாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா அல்லது வேறு எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் எதையும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :