ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம்: கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு

பட மூலாதாரம், Education Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தக்கூடிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவிவரும் நிலையில் இந்தத் திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள்.

1. 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2. நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு ரேஷன் அட்டையின் மூலம் நாடு முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும்.

3. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

4. தற்போது இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர், இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை எதிலும் பொருட்களைப் பெறலாம்.

5. ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்கள் சோதனை முறையில் தங்கள் மாநிலத்துக்குள் இதனைச் செயல்படுத்திப்பார்த்துவருகின்றன. அதாவது, இந்த மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் நுகர்வோர் மாநிலத்தின் எந்த ஒரு கடையிலும் தங்களுக்கான பொருட்களைப் பெற முடியும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

6. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஏழு மாநிலங்கள் மற்றும் ஏற்கனவே அமலில் உள்ள நான்கு மாநிலங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 11 மாநிலங்களில் இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வரும்.

7. இந்தத் திட்டத்தின் கீழ்வரும் ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்ட பயனாளர் தொகுப்பு, மையப்படுத்தப்பட்ட ஒரு சர்வரில் இணைக்கப்படும். அதனால், ஒரே பயனாளி இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது.

8. ஒரு மாநிலத்தில் பதிவுசெய்துள்ள பயனாளி, மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களைப் பெறும்போது, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அதாவது அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும் கோதுமை கிலோ ஐந்து ரூபாய்க்கும் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவு தானியங்களையோ பெற முடியாது.

9. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களைப் பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

10. சில சவால்களும் இருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரேஷன் கடைகளில் பிஓஎஸ் (Point of Sale) எந்திரம் மிக அவசியம். இந்தியாவில் தற்போது 77 சதவீதக் கடைகளில் மட்டுமே இந்த எந்திரம் இருக்கிறது. புலம் பெயரும் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன.

வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

பட மூலாதாரம், Getty Images

11. அதேபோல, எந்த காலகட்டத்தில் எங்கிருந்து தொழிலாளர்கள் எங்கே புலம்பெயர்வார்கள் என்பதை கண்காணித்து அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு தானியங்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றபடி இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்களின் செயல்பாடுகள் தீவிரமாக வேண்டியிருக்கும்.

12. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் அட்டைகளே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.

14. பிஓஎஸ் எந்திரங்கள் இயங்குவதற்கு இணைய இணைப்பு தேவை. பல மாநிலங்களில் இணைய இணைப்பு இல்லாதபோது, உணவு தானியங்கள் வழங்கப்படுவதில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது அவ்வாறு நடக்கக்கூடாது என்ற கவலை இருக்கிறது.

15. தமிழ்நாடு போன்ற சிறப்பான பொது விநியோகத் திட்டத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை (Universal PDS) செயல்படுத்துகின்றன. ஆனால், இந்தத் திட்டம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மட்டும் பயனளிக்கும் திட்டம் (Targetted PDS). தாங்கள் விரும்பும் பாணியில் திட்டத்தைச் செயல்படுத்தும்படி மத்திய அரசு எதிர்காலத்தில் வலியுறுத்துமோ என்ற கவலை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: