You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டு 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 30 வரை மீண்டும் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.
அவரது முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்று வரை தமது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அவரது காவல் முடிவடைவதை ஒட்டி, சிபிஐ தலைமையகத்திலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் சிதம்பரம்.
தங்கள் விசாரணை முடிவடையவில்லை என்று கூறி சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியது சி.பி.ஐ. அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தா சிபிஐ சார்பில் வாதிட்டார்.
"பிரிண்டர் கோளாறு - வழக்கு நாட்குறிப்பு ஸ்டாக் இல்லை"
சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்டார். காவலில் வைத்து சிதம்பரத்திடம் பெரிதாக விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. மொத்தம் 26 மணி நேர விசாரணைதான் சிதம்பரத்திடம் நடத்தப்பட்டுள்ளது. இதனை சிபிஐ ஒரு பரபரப்பாக மாற்றுகிறது என்று வாதிட்டார் கபில் சிபல். பெரிய சதி நடந்திருப்பதாக சிபிஐ வாதிடுகிறது. ஆனால், அவர்கள் தாக்கல் செய்த காவல் கோரும் மனுவில் அது தொடர்பாக ஏதும் இல்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.
வழக்கு நாட்குறிப்பை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கேட்டபோது, பிரிண்டர் பிரச்சனையால் வழக்கு நாட்குறிப்பின் அச்சிட்ட பிரதி கையிருப்பில் இல்லாததால், தட்டச்சு செய்த பிரதி தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிவித்தது சிபிஐ.
இதனிடையே, முன் ஜாமீன் மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அமலாக்கப் பிரிவு கைது செய்வதற்கு உள்ள தடை தொடர்கிறது
இதனிடையே இதே ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கு உள்ள தடை நாளை வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நாளையும் தொடர்ந்து விசாரிக்கும்.
நீதிமன்றத்தில் நடந்த வாதப் பிரதிவாதம்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 நாள் சி.பி.ஐ காவலில் இருந்த ப.சிதம்பரம், இந்த காவல் முடிந்து நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.சி.பி.ஐ தரப்பு வழக்குரைஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:5 நாள் காவல் வேண்டும் என, ஏனெனில், கடந்த முறை 4 நாள் தான் காவல் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒருவர் விசாரணையை எதிர்கொண்டு சில தகவல்களை வழங்கியுள்ளார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.எனவே சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில விவரங்களை அமலக்கப் பிரிவு எங்களுக்கு கொடுத்துள்ளது, அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். நீதிபதி:இதுவரை காவலில் இருந்தபோது நடைபெற்ற விசாரணை என்ன? அதை காட்டுங்கள்.
துஷார் மேத்தா:சில மின் அஞ்சல் குறித்த விவரங்களை நீதிபதி பார்க்க வேண்டும்மேலும் அமலக்கத்துறை சில தகவல்களை உச்சநீதிமன்றத்தில் கொடுத்துள்ளது, அது தொடர்பாக விசாரிக்க வேண்டும். எனவே 5 நாள் காவல் தேவை. சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர் கபில் சிபல்:இதை எதிர்க்கிறேன். துஷார் மேத்தா:இமெயில் பரிமாற்றம், உரையாடல்கள, சில ஆவணப் பரிமாற்றம் உள்ளிட்டவை ஆதாரங்களாக கிடைத்துள்ளன. அதுதொடர்பாக விசிரிக்க மேலும் அவகாசம் வேண்டும். கபில் சிபல்:கடந்தமுறை 5 மில்லியன் டாலர் வங்கி கணக்கில் இருந்ததாக சி.பி.ஐ கூறியது. அதற்கான ஆவணம் இல்லைஇது பீட்டர் முகர்ஜி கொடுத்ததா? கொடுத்தாரா என்ற கேள்விக்கு பதிலில்லை, ஆவணம் இல்லை. வங்கி கணக்கு தொடர்பாக ஆதாரம் உள்ளது என கூறினர். ஆனால் தற்போது வரை அது தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை, பதிலும் இல்லை. துஷார் மேத்தா:வங்கி கணக்கு தொடர்பாக அமலக் கத்துறை விசாரிக்கும், அதில் எங்களுக்கு தொடர்பில்லை. கபில் சிபல்:கடந்தமுறை வங்கி கணக்கு குறித்து சி.பி.ஐ வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார், ஆதாரம் கிடைத்ததாக கூறினர் அது எங்கே?தற்போது வங்கி கணக்கு அமலக்கத்துறை விசாரிக்கும் என கூறுகிறார், இது முரண்பாடாக உள்ளது .மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை அப்படி இருந்தால் , அதை நீதிமன்றத்திடம் காட்டுங்கள், தாக்கல் செய்யுங்கள். ஏன் நீதிமன்றத்தில் காண்பிக்க மறுக்கின்றனர்மேலும் இமெயில் தொடர்பாக சிதம்பரம் ஏற்கனவே விசாரணையில் விளக்கம் அளித்துள்ளார். துஷார் மேத்தா:பல்வேறு ஆவண, ஆதாரம் அடிப்படையில் தான் கூடுதலாக 5 நாள் கோருகிறோம்கபில் சிபல்:எந்த ஆவணமும் இல்லாமல், ஆவணம் இருக்கிறது, விசாரிக்க வேண்டும் என கோருவது எப்படி?மேலும் 5 மில்லியன் டாலர் இருப்பதற்கான, இருந்ததற்கான ஆதாரம் எங்கே ? அதை எனக்கு காட்ட வேண்டாம், நீதிமன்றத்திடம் கொடுங்கள். எந்த ஆதாரமாக இருந்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி கூறுங்கள். துஷார் மேத்தா:நான் ஆவணம் தொடர்பாக பதிலளிக்கிறேன். கபில் சிபல்:காவல் நீட்டிப்பிற்கான அடிப்படையான தரவுகளையாவது கொடுத்துவிட்டு பிறகு சிபிஐ எவ்வளவு நாள் காவல் நீட்டிப்பு வேண்டுமானாலும் கேட்கட்டும்துஷார் மேத்தா:அடிப்படை சாட்சியங்கள் கூட இல்லாமல் எப்படி சிதம்பரத்தை காவலில் வைத்திருக்க முடியும்?நீதிபதி:ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ காவல் மேலும் 4 நாள் நீட்டிக்கப்படுகிறது. என்ன வழக்கு?
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ. வாதிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்