You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொள்ளையர்களை விரட்டிய நெல்லை தம்பதியருக்கு அமிதாப் பாராட்டு
நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை, வயதான கணவன் மனைவி இருவரும் சேர்ந்து போராடி விரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.
அவர்களின் வீரத்தை பாராட்டி நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் விவசாயி சண்முகவேலு மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் நேற்று வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டிற்குள் முகமூடி அணிந்திருந்த இருவர் அரிவாளுடன் புகுந்தனர்.
சண்முகவேலு வெளியே அமர்ந்திருந்த போது அவரது கழுத்தை துணியால் நெருக்கும் காட்சி சிசிடிவி பதிவில் இடம் பெற்றுள்ளது.
அவர் அலறும் சத்தத்தை கேட்டு, வெளியே ஓடி வந்த அவரது மனைவி, வீட்டு வாசலில் கிடந்த செருப்பைக் கொண்டு அந்த கொள்ளையர்களை தாக்குகிறார்.
இரண்டு முகமூடி கொள்ளையர்களும் கையில் அரிவாள் வைத்திருந்த நிலையில், வயதான கணவன் மனைவி இருவரும் அங்கிருந்த ஸ்டூல், சேர், போன்றவற்றை வைத்து அவர்களை தாக்கினர்.
அப்போது செந்தாமரை கையில் அரிவாள் வெட்டுப்பட்டுள்ளது. நான்கு பவுன் செயினை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அவர்கள் வீட்டில் உள்ள CCTV யில் பதிவானது. அவர்கள் வீட்டில் இருந்து கடையம் காவல் நிலையம் 600 மீட்டர் தூரம் மட்டுமே என்று கூறப்படுகிறது.
இது குறித்து கடையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அலைப்பேசியில் அவர்களை தொடர்புகொண்டு பேச முயற்சித்தபோது, அவரது மகன், நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறினார்.
நேற்றில் இருந்து அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் போலீஸாரும் வந்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த தம்பதியரின் வீரத்தை பாராட்டி நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்