You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், 'இந்தியாவே திரும்பிப் போ' முழக்கம் #BBCGroundReport
காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்லெறி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா. இதனிடையே காஷ்மீர் சென்றுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த மாற்றங்கள் மக்கள் நன்மைக்கே நடந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்புக்கு தாங்கள் உறுதியளிப்பதாகவும் பேசியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்ட உறுப்புரைகளில் இந்திய ஒன்றிய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
தெருவுக்கு வந்து போராடிய போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முற்பட்ட போது, அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.
"இந்தியாவே திரும்பிப் போ; காஷ்மீர் எங்களுடையது" என்று கோஷம் எழுப்பினர்.
தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக, ஏமாற்றப்பட்டுவிட்டதாக காஷ்மீரிகள் எண்ணுகின்றனர். காஷ்மீர் மக்கள் கோபமாக இருக்கின்றனர்.
"நாங்கள் கற்காலத்திற்கே திரும்ப சென்றுவிட்டோம். வெளி உலகத்தில் என்ன நடக்கிறதென எங்களுக்கு தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறோம். இதன் விளைவுகள் ஆபத்தாக இருக்கும். பாலத்தீனத்தில் எப்படி இஸ்ரேல் குடியிருப்புகளை உண்டாக்குகிறதோ. அதுபோலவேதான் இங்கேயும் செய்வார்கள்"என்று அசிம் அப்பாஸ் என்ற மாணவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
'மக்கள் அல்ல நிலம் தான் வேண்டும்'
"முதலில் சுற்றுலாப் பயணிகளுக்கு, பக்தர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றார்கள். ஆனால், அது போல எதுவும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட செயல். அவர்கள் சட்ட உறுப்புரை 370 மற்றும் 35 ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இதனையெல்லாம் செய்திருக்கிறார்கள்.
சட்டத்தை நாசம் செய்துவிட்டார்கள். காஷ்மீரி மக்கள் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு காஷ்மீர் நிலம் மட்டும்தான் வேண்டும். காஷ்மீரிகள் பசியில் இருக்கிறார்களா அல்லது சாகிறார்களா என்பது குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை." என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் பயண முகவரான இக்பால்.
மேலும் அவர், "நரேந்திர மோதி இதனை விரும்பி இருந்தால், அவர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு இருக்க வேண்டும். அமித் ஷா அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது இதனை அறிவிக்கிறார். அவர் எதிர்க்கட்சிகளின் குரலை கேட்கவே இல்லை. இது ஆதிக்கமன்றி வேறல்ல." என்கிறார்.
காஷ்மீரி அரசியல்வாதிகள் ஓமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி காவலில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரிதாக ஆதரவு இல்லை.
பொருத்தமற்ற தலைவர்கள்
"இப்போது நிலவும் சூழலுக்கு அவர்கள் பொருத்தமற்றவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் இந்திய அரசை நம்பிய போதும், அவர்கள் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். இந்தக் கட்சிகள் மூலம் அனைத்தையும் இந்திய அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
அதாவது தேசிய மாநாட்டு கட்சியாக இருக்கலாம், அல்லது பிடிபியாக இருக்கலாம் அல்லது எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்களின் நண்பர்கள் குற்றச்செயலில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்." என்று கூறுகிறார் எழுத்தாளர் குலாம் அலி.
அடுத்து என்ன நடக்குமென்ற அச்சத்தில் காஷ்மீர் மக்கள் இருக்கிறார்கள்.
அமைதியான சூழல்
இந்த சூழலில் காஷ்மீர் சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெருவில் நின்று மக்களுடன் உணவருந்தி உள்ளார்.
அப்போது அவர், "அமைதியாக இருங்கள். அல்லா இதனை நன்மைக்காகவே செய்துள்ளார். நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளுக்கு ஒரு சக்தி உள்ளது. உங்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி தருகிறோம். உங்கள் பிள்ளைகள், உங்கள் பேரக் குழந்தைகள் மகிழ்ச்சியாக நலமாக இருப்பார்கள். இஸ்லாத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நல்ல மனிதர்களாக அவர்கள் வளர்வார்கள். இதுபோன்ற கடை அடைப்புகள் நல்லதல்ல. நல்ல சூழலை நாம் உருவாக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்