பெருமழையால் சிக்கி தவிக்கும் மும்பை

பெருமழையால் சிக்கி தவிக்கும் மும்பை - தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Pratik Chorge/Hindustan Times via Getty Images

பெருமழையால் சிக்கி தவிக்கும் மும்பை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தானே, கல்யாண், பால்கார் போன்ற இடங்களும், புனே மாவட்டமும் கடும் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மும்பை மாநகரில் வெள்ள அபாயத்தை சமாளிக்க மாநில அரசு முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பெருமழையால் சிக்கி தவிக்கும் மும்பை

பட மூலாதாரம், Getty Images

அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் மருந்துக்கடைகள் உள்பட சில அத்தியாவசிய பொருட்கள் விற்கும் அங்காடிகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே மழை வெள்ளத்தால் மும்பையில் பல இடங்களிலும் வாகன போக்குவரத்து கடுமையயாக பாதிப்படைந்துள்ளது.

பெருமழையால் சிக்கி தவிக்கும் மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலையில் மும்பை கோலாப்பூர் மகாலக்ஷ்மி விரிவு ரயில் மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ரயில் 12 மணி நேரமாக நின்றதால், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த ரயிலில் இருந்து மொத்தம் 1,050 பேர் தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம் மற்றும் கடற்படை அணிகள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

மகாலெட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது - 1,050 பேர் மீட்பு

பட மூலாதாரம், NDRF

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) கடுமையான மழை பெய்த நிலையில், இன்று மும்பை நகரத்தில் காலையில் இருந்து மழை பெய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், வானம் மேகமூட்டமாக இருப்பதாகவும், மக்கள் இன்றும் பெரும்பாலும் பணிக்காக செல்லவில்லையென்பதால் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளதாக மும்பை தாராவி பகுதியை சேர்ந்த பீமா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலன் தொடர்பான பிரச்சனைகளில் தவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் உணவு விடுதிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் நாங்கள் சிரமப்படுகிறோம்'' என்று பீமா தெரிவித்தார்.

பெருமழையால் சிக்கி தவிக்கும் மும்பை - தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Himanshu Bhatt/NurPhoto via Getty Images)

மும்பை தவிர மாநிலத்தின் மற்ற நகரங்களும் மழையால் பதிப்படைந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் பல ஆறுகளும் பல் மாவட்டங்களும் வெள்ள அபாயநிலையை எதிர்நோக்கியுள்ளன.

மாநிலத்தில் மும்பை உள்பட பல இடங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில அரசுத்துறையில் வெள்ள நிவாரண மற்றும் துயர்துடைப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரயில்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :