You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை தண்ணீர் பிரச்சனை: 48 மணிநேரத்திற்குள் தண்ணீர் விநியோகம் நிச்சயம்: சென்னை மெட்ரோ வாட்டர் அறிவிப்பு
சென்னையில் தண்ணீர் லாரிக்காக மக்கள் காத்திருக்க தேவையில்லை எனவும், பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் முறையை தொடங்கியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தண்ணீருக்காக பதிவு செய்பவர்கள் பத்து நாட்கள் வரை காத்திருக்கவேண்டும் என்ற நிலை இருப்பதாக சமூகவலைதளங்களில் வந்த புகார்களை அடுத்து, தண்ணீர் வழங்கும் சேவையை முற்றிலும் புதுப்பித்துள்ளதாக மெட்ரோவாட்டர் நிறுவன இயக்குநர் டி என் ஹரிஹரன் தெரிவித்தார்.
குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு பிறகுதான் அடுத்த முன்பதிவை செய்யமுடியும் என்றும் பதிவு செய்தவர்களுக்கு 48 மணிநேரத்திற்குள் தண்ணீர் வழங்கப்பட்டுவிடும் என சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தில் உள்ள தனிவீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மற்றும் இணையம் வாயிலாக தண்ணீரை முன்பதிவு செய்யலாம்.
இணையத்தில் பதிவு செய்பவர்கள் வங்கி அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பணத்தை செலுத்தலாம். பணத்தை நேரடியாக விநியோகத்திற்கு பிறகு செலுத்த எண்ணுபவர்கள், 3000 லிட்டர் வரை மட்டும் பதிவு செய்து, தண்ணீர் வந்தபிறகு, பணம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல, தண்ணீரின் அளவை பொருத்து பதிவு செய்யும் நேரமும் முறைப்படுத்தபட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலை ஆறு மணி முதல் 3,000 லிட்டர் பதிவு செய்யலாம், 6,000 லிட்டர் தேவைப்படுவோர் காலை 8 மணிக்கு பதிவு செய்யலாம், 9,000லிட்டர் தேவைப்படுவோர் காலை 10மணிக்கு செய்யலாம். 12,000 மற்றும் 16,000 லிட்டர் தேவைப்படுவோர் மதியம் 12 மணி முதல் பதிவு செய்யலாம் என ட்விட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்பவர்கள் எந்த காரணத்தை கொண்டும் தேதியை அல்லது அளவை மாற்றமுடியாது என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. தனிவீடுகளில் வசிப்பவர்கள் 9,000 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் கோரலாம். அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூட்டாக பணம் கொடுத்து வாங்குவதால், 9,000 முதல் 16,000 லிட்டர் வரை பெறமுடியும் என்ற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் நகரவாசிகள் பலரும் சந்தேகங்களை கேட்டும், வாழ்த்துகளையும் பதிவுசெய்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்