பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு'
தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் தற்போது இடஒதுக்கீடு பெறும் எந்த வகுப்பினருக்கும் பாதிப்பில்லாமல் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அந்நாளிதழ் பின் வருமாறு விவரிக்கிறது,
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு பிரச்னையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:-
துரைமுருகன்: முன்னேறிய சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது, அதுகுறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புப்படி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிய பேரவை விரும்புகிறது. எனவே, அந்த விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற அடிப்படையில் ஆயிரம் மருத்துவ இடங்கள் நமக்குக் கூடுதலாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க நடந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
திராவிட இயக்க பரிணாம வளர்ச்சியின் உச்சபட்சமாக 69 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதி செய்து அதனை வரலாற்றில் பதிவு செய்தார்.
10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் நம்முடைய நிலைப்பாடு குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தப்பட்டது. அரசின் நிலைப்பாடாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கை நிலை நிறுத்தப்படும். அதற்கு எந்த பங்கமும் வராது.
மத்திய அரசு தெரிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா. அப்படி ஏற்றுக் கொண்டால் நாம் ஏற்கெனவே பின்பற்றி வரும் 69 சதவீதத்துக்கு குந்தகம் விளைவிக்குமா, விளைவிக்காதா என்பதெல்லாம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். அந்த முடிவு எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்போம். இல்லாவிட்டால் நிராகரிப்போம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்து தமிழ்: மருத்துவப் படிப்பு- தமிழக தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 218 பேரின் பெயர்கள், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய வெளி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேர் இடம் பிடித்தனர். இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேர் இடம் பெற்றனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை சுகாதாரத் துறை அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் இருந்த முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி கடிதம் வழங்கினார். அப்போது தமிழக தர வரிசைப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பது அமைச்சர் சி.விஜய பாஸ்கரிடம் கேட்டபோது, "ஒருவர் 2 மாநிலங்களில் விண்ணப்பித் தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் 218 பேர் தமிழகம் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் விண்ணப்பித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 218 பேரில் 77 பேரின் பெயர்கள் ஆந்திர மாநில தரவரிசைப் பட்டியலிலும், 130 பேரின் பெயர்கள் கர்நாடக மாநில தரவரிசைப் பட்டியலிலும், 12 பேரின் பெயர்கள் தெலங்கானா தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தால், அவர்கள் தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக் கலாம்.
இதேபோல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் படிப்பு, வேலை நிமித்தமாக தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒருவரே இரண்டு மாநிலங்களில் போலியாக இருப்பிடச் சான்று பெற்று விண்ணப்பிக்கக்கூடாது" என்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். போலியான இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்ததாகவும், அவர்களில் 4 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சுகாதாரத் துறையும், காவல்துறையும் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மை நிலவரத்தை கடைசி வரை யாரும் தெரிவிக்கவில்லை.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: 'தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்'

பட மூலாதாரம், Getty Images
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை என்று கூறி மாநில அரசு தண்ணீரை திறக்க மறுத்துவிட்டது.
இப்போது காவிரி உற்பத்தியாகும் குடகு மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மண்டியா விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் நோக்கத்திலும், தமிழகம் பயன்பெறும் வகையிலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொள்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு மத்தியில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை குமாரசாமி பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடத்தினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் 18 ஆயிரம் கோடி உறுதிமொழி அளிக்க வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல ரூ.18,000 கோடியை வைப்புத் தொகையாக அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. நரேஷ் கோயலும், அவரது மனைவியும் கடந்த மே 25-ஆம் தேதி துபை செல்ல இருந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்ததையடுத்து, கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் நரேஷ் கோயலை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டார் அவர். நிதி நெருக்கடி காரணமாக தனது சேவைகளை கடந்த ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுத்திக் கொண்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












