You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானாவில் பெண் அதிகாரியை தாக்கிய கும்பல் - வைரலான காணொளியால் பெரும் அதிர்ச்சி
தெலங்கானா மாநிலத்தில் காவல்துறையினர் முன்னிலையில் கம்புகளால் வனத்துறை பெண் அதிகாரியை தாக்கிய கும்பலை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரங்கள் நடுகின்ற பணித்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய காணொளி ஒன்று மிகவும் வைரலாகியதுடன், இதனை கண்டித்து ஆளும் கட்சி ட்விட்டர் பதிவிட்டுள்ளது.
பலத்த காயமடைந்த இந்த வனத்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிராக்டர் மேல் நின்றுகொண்டு, கும்பலை சமாதானப்படுத்துகையில், மூங்கில் கம்புகளால் பெண் அதிகாரியை இந்த கும்பல் தாக்குவதை வைரலான காணொளி காட்டுகிறது.
வனத்துறை அதிகாரிகளும், உள்ளூர் காவல்துறையினரும் இதில் தலையிட்டு, தாக்குதலை தடுத்து கும்பலை கலைய செய்யும் வரை, மூங்கில் கம்புகளால் இந்த பெண் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் வைரலாக பரவிய இந்த காணொளி, நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் உயர்மட்ட அதிகாரி கல்வகுண்டல தாரக ராமராவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரரான உள்ளூர் அதிகாரி கோனரு கிருஷ்ண ராவ் என்பவர் இந்த தாக்குதல் நடத்திய கும்பலின் தலைவர் என்று இனம் காணப்பட்டுள்ளார். இவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதை இந்த கட்சி உறுதி செய்துள்ளது.
இந்த சம்வத்தை நியாயப்படுத்தும் வகையில், வனத்துறை அதிகாரிகள் பயிர்களை அழிப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய முயல்வதாக உள்ளூர் ஊடகங்களிடம் தாரக ராமராவ் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் "எதிர்பாராமல்" நடைபெற்றுவிட்டது என்று தெரிவித்துள்ள அவர், "பழங்குடியின விவசாயிகளை வனத்துறை பயமுறுத்துவதாகவும், அவர்களின் நிலத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கி கொள்வதாகவும்" குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த காவல்துறையினர் இருவர், இந்த தாக்குதலை தடுக்க தவறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பிபிசி தெலுகு சேவை உறுதிசெய்துள்ளது.
கடந்த வாரம் தொடங்கிய மிக பெரியதொரு நீர்ப்பாசன திட்டமான கலீஸ்வரம் பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, மரங்களை நடுவதற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மாநில வனத்துறை மரங்களை நடுவதற்கு முயற்சி மேற்கொண்ட காகஸ் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றது.
வனத்துறை பெண் அதிகாரி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தெலங்கானா மாநில எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்