You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் தோட்டத்தில் தவறி விழுந்த விமான பயணி மற்றும் பிற செய்திகள்
விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள கிளஃபாம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கென்ய பயணியர் விமானம் ஒன்று ஹீத்துரு விமான நிலையத்தில் இறங்குவதற்கு சக்கரங்களை கீழே இறக்கியபோது, இந்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நைரோபியிலிருந்து வந்த கென்ய பயணியர் விமானத்தில் இருந்து விழுந்தவர் என்று நம்பப்படும் இந்த நபரின் சடலம், பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.
கிளஃபாம் தோட்டத்தில் சூரிய ஒளியில் படுத்திருந்த (சன் பாத்) உள்ளூர்வாசி ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு ஒரு மீட்டருக்கு அப்பால் இந்த நபர் விழுந்ததாக அருகே இருந்த ஒருவர் தெரிவித்தார்.
சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே பார்த்தபோது, அங்கு கிடந்த இந்த சடலத்தை கண்டதாகவும், தோட்டத்தில் சுவரில் ரத்த கறை இருந்ததை பார்த்த்தாகவும் பெயர் வெளியிட விரும்பாத இந்த நபர் கூறியுள்ளார்.
இதனை கண்டு, அருகில் சூரிய ஒளியில் படுத்திருந்தவரும், அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள மெட் காவல்துறை, இந்த நபரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்
பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நீட்சியில் இது சமீபத்திய சம்பவமாக அமைந்துள்ளது.
செய்தியை வாசிக்க:ஹாங்காங்கில் தீவிரமடையும் போராட்டம்: நாடாளுமன்றம் சூறையாடப்பட்டது
வேலுப்பிள்ளை பிரபாகரன் சட்டவிரோத போதை பொருள்கள் மூலமாக பணம் சம்பாதித்தார் - மைத்திரிபால சிறிசேன
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சட்டவிரோத போதைப்பொருட்களின் ஊடாகவே தமக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செய்தியை வாசிக்க: பிரபாகரனின் பிரதான வருமான வழி போதைப்பொருள் வர்த்தகம் - சிறிசேன
இரான் அணுசக்தி ஒப்பந்தம் - ஒப்பந்த விதிகளை இரான் மீறியதை உறுதி செய்தது சர்வதேச கண்காணிப்பகம்
இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை மீறியதை சர்வதேச கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.
300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான் அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது.
உலகக் கோப்பை 2019 : விராட் கோலி 'பௌண்டரி எல்லை' குறித்து விமர்சனம் - விதிகள் சொல்வது என்ன?
இந்திய அணித்தலைவர் விராட் கோலி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இருந்த ஆட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றி மூலமாக இங்கிலாந்து அரைஇறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்தது. அதே சமயம் இந்தியா இன்னும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.
செய்தியை வாசிக்க: விராட் கோலி 'பௌண்டரி எல்லை' குறித்து விமர்சனம் - விதிகள் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்